ECONOMYNATIONAL

நூறு ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த சிறைகளை மாற்ற சிறைத்துறை பரிந்துரை 

மலாக்கா, அக் 6- நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழைமைவாய்ந்த சிறைச்சாலைகளை மாற்றுவதற்கு சிறைச்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. அவற்றில் 1800 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட சிறைகளும் அடங்கும்.

புதிதாக மாற்றுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட சிறைச்சாலைகளில் அலோர் ஸ்டார், பினாங்கு, தைப்பிங், பத்து காஜா மற்றும் சிரம்பானிலுள்ள சிறைச்சாலைகளும் இடம்பெற்றுள்ளதாக என்று கைதிகள் மேலாண்மை ஆணைய இயக்குநர் அஜிடின் சாலே கூறினார்.

இந்த சிறைச்சாலைகள் மிகவும் பழையவையாகவும் நடப்புச் சூழலுக்கு பொருத்தமற்றவையாகவும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சில அம்சங்களில் நமக்கு மாற்றம் தேவைப்படுகிறது. சில சிறைச்சாலைகளில் உள்ள தடுப்புக் காவல் அறைகள் இன்னும் ‘பக்கெட் முறை‘ கழிப்பறைகளைக் கொண்டுள்ளன.

நவீன சிறைகளில் இந்த முறை இப்போது பயன்படுத்தப்படுவதில்லை என்றார் அவர்.

அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்த சிறைச்சாலை  நிர்மாணிப்பு உள்ளடக்கப்படுவதற்கு ஏதுவாக அரசிடம் இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளோம் என அவர் சொன்னார்.

இங்குள்ள ஹென்றி கர்னி பள்ளியில் 2021 ஆம் ஆண்டு உயர்நெறிக்கான சாதனை விருதளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :