ECONOMYSELANGOR

இலக்கவியல் கார் நிறுத்தக் கட்டண முறை அமோக ஆதரவு- 22 லட்சம் வாகனமோட்டிகள் பதிவு

கோலாலம்பூர், அக் 7- ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங் (எஸ்.எஸ்.பி.) எனப்படும் இலக்கவியல் கார் நிறுத்த கட்டண முறை சிலாங்கூரில் கடந்த 2018 ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இதுவரை 22 லட்சம் பேர் அதில் பதிவு செய்துள்ளனர்.

மாநிலத்தின் 10 ஊராட்சி மன்றங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த விவேக கார் நிறுத்த கட்டண முறையின் வாயிலாக கட்டணங்கள் மற்றும் சம்மன்களை எளிதாக செலுத்துவதற்குரிய வாய்ப்பை வாகனமோட்டிகள் பெற்றுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

காகித கூப்பன் முறையிலான கார் நிறுத்த கட்டண முறைக்கு பதிலாக இலக்கவியல் கார் நிறுத்தக் கட்டண முறையை மாநில அரசு இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முழுமையாக அமல்படுத்தியது. இந்த முறையை அமல்படுத்திய நாட்டின முதல் மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது என்று இங்குள்ள கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர்  தெரிவித்தார்.

முன்னதாக அவர் இங்கு நடைபெற்று வரும் 2022 ஆம் ஆண்டு சிலாங்கூர் அனைத்துலக வாணிக உச்ச நிலை மாநாட்டில் (சிப்ஸ்) சிலாங்கூர் விவேக நகரம் மற்றும் இலக்கவியல் பொருளாதார மாநாட்டை அவர் தொடக்கி வைத்து உரையாற்றினார்.

இந்த எஸ்.எஸ்.பி. கார் நிறுத்த கட்டண முறையை ஸ்மார்ட் சிலாங்கூர் டெலிவரி யூனிட் உருவாக்கியுள்ளது. கார் நிறுத்தக் கட்டணங்களைச் செலுத்தும் பணியை எளிதாகவும், விரைவாகவும் பாதுகாப்பாகவும் மேற்கொள்ள இது உதவுகிறது.


Pengarang :