ECONOMYSELANGOR

பலாக்கோங் தொகுதியில் மலிவு விற்பனை- காலை 7.30 மணி முதல் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர்

உலு லங்காட், அக் 7– பலாக்கோங் தொகுதியில் முதன் முறையாக இன்று ஏசான் மக்கள் மலிவு விற்பனை நடத்தப்பட்டது. தாமான் செராஸ் பிரிமாவில் நடத்தப்பட்ட இந்த விற்பனையில் பொருள்களை வாங்குவதற்காக பொது மக்கள் காலை 7.30 மணி முதல் வரிசையில் காத்திருந்தனர்.

சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மலிவு விற்பனையில் அத்தியாவசியப் பொருள்களை குறைந்த விலையில் வாங்குவதற்காக சுமார் 450 பேர் இன்று இங்கு திரண்டனர்.

இன்றைய விற்பனையில் 500 கோழிகள், 300 பாக்கெட் உறையவைக்கப்பட்ட மாட்டிறைச்சி, 150 போத்தல் ஐந்து கிலோ சமையல் எண்ணெய், 300 பாக்கெட் அரிசி, 300 பாக்கெட் கெம்போங் மீன் 300 தட்டு முட்டை விற்பனை செய்யப்பட்டதாக பி.கே.பி.எஸ் துணை விற்பனை நிர்வாகி அஜினோர் ஜாஹிர் கூறினார்.

கோழிக்கான தேவை அதிகரித்ததைத் தொடர்ந்து இன்றைய விற்பனையில் அந்த உணவு மூலப் பொருளின் எண்ணிக்கை 300லிருந்து 500 ஆக உயர்த்தப்பட்டது. விற்பனைக்கு வைக்கப்பட்ட அனைத்துப் பொருள்களும் மூன்றே மணி நேரத்தில் விற்று முடிந்தன என்றார் அவர்.

இன்றைய விற்பனை சீராக நடைபெற்றது. இந்த விற்பனைத் திட்டம் குறித்து இத்தொகுதி மக்கள் மனநிறைவு கொண்டிருப்பார்கள் என நம்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

மாநிலத்தின் 56 தொகுதிகளில் உள்ள 160 இடங்களில் இந்த மலிவு விற்பனைத் திட்டத்தை மேற்கொள்ள சிலாங்கூர் அரசு ஒரு கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளது. இந்த விற்பனை கடந்த மாதம் 6 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


Pengarang :