ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஹலால் சான்றிதழுக்கு பூமிபுத்ரா அல்லாத 3,000 நிறுவனங்கள் விண்ணப்பம்

கோலாலம்பூர், அக் 8- இவ்வாண்டு ஜனவரி முதல் கடந்த மாதம் இறுதி வரை பூமிபுத்ரா அல்லாத நிறுவனங்களிடமிருந்து மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஹலால் சான்றிதழுக்கான விண்ணப்பங்களை சிலாங்கூர் மாநில இஸ்லாமிய சமய இலாகா (ஜாய்ஸ்) பெற்றுள்ளது.

கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தைக் காட்டிலும் இம்முறை இந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஜாய்ஸ் தலைமை உதவி இயக்குநர் அகமது சோலிஹின் மர்யோக்கான் கூறினார்.

இந்த விண்ணப்பங்களில் பெரும்பாலானவை உணவுத் தயாரிப்பு மற்றும் உணவு மையங்கள் தொடர்பானவையாகும் என அவர் சொன்னார்.

ஹலால் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது அந்த சான்றிதழின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்திருப்பதை புலப்படுத்துவாக உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

உணவுத் தயாரிப்புத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களே இந்த ஹலால் சான்றிதழுக்கு அதிகம் விண்ணப்பம் செய்துள்ளனர். மருந்துகள், தளவாடம் மற்றும் அழகு சாதனம் போன்றவற்றுக்கும் ஹலால் சான்றிதழ் தேவைப்பட்ட போதிலும் ஹலால் சான்றிதழை சமூகம் உணவு சார்ந்த துறைகளுடன் அதிகம் தொடர்புபடுத்திப் பார்க்கிறது என்றார் அவர்.

இங்குள்ள கோலாலம்பூர் அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்று வரும் சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாட்டில் ஹலால் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலுக்குப் பின்னர் நாட்டின் பொருளதாரம் மீட்சி பெற்று வரும் காரணத்தால் இவ்வாண்டு இறுதிக்குள் ஹலால் சான்றிதழ் பெறுவதற்கு 4,000 விண்ணப்பங்கள் வரை கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.

 


Pengarang :