ECONOMYSELANGOR

மாநில அரசின் மலிவு விற்பனை அடுத்தாண்டிலும் தொடர வாய்ப்பு

சபாக் பெர்ணம், அக் 14- ஜெலாஜா ஏசான் ராக்யாட் எனும் மாநில அரசின் அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனை அடுத்தாண்டிலும் தொடர வாய்ப்புள்ளது.

இவ்வாண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடையும் இந்த மலிவு விற்பனை அடுத்தாண்டு தொடக்கத்திலும் தொடர்வதற்குரிய வாய்ப்பு உள்ளதாக சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் அதிகாரி முகமது அஸ்ரி அபு ஹசான் கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மக்களுக்கு மிகுந்த நன்மையைத்  தரக்கூடியதாக உள்ளதால் அதனை அடுத்தாண்டிலும் தொடர திட்டமிட்டுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

மாநிலத்தின் 56 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 160 இடங்களில் இந்த  மலிவு விற்பனையை மேற்கொள்ள மாநில அரசு ஒரு கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளது. இந்த மலிவு விற்பனை கடந்த மாதம் 6ஆம் தேதி தொடங்கி வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதனிடையே, இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் கிடைத்து வரும் நல்ல வரவேற்பு காரணமாக இந்த விற்பனை வழி கிடைக்கும் தினசரி வருமானம் 19,000 வெள்ளியை எட்டியுள்ளதாக முகமது அஸ்ரி அபு ஹசான் தெரிவித்தார்.

ஒவ்வொரு இடத்தில் 400 முதல் 500 வாடிக்கையாளர்களை இந்த விற்பனை ஈர்ப்பதாக கூறிய அவர், கோழி மற்றும் முட்டைக்கு  நல்ல வரவேற்பு உள்ளது என்றார்.

இவ்வாரம் தொடங்கி நடத்தப்படும் மலிவு விற்பனைகளில் கோழியின் எண்ணிக்கை 300 இல் இருந்து 500 ஆக உயர்த்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

 


Pengarang :