ECONOMYSELANGOR

நாட்டைக் காக்கும் எண்ணம் உண்மையில் இருந்தால் அரசு பொதுத் தேர்தலை நடத்தியிருக்காது- அமிருடின் சாடல்

மெந்தகாப், அக் 20- நாட்டைக் காக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு உண்மையில் இருந்திருந்தால் மழை காலத்தில் அது தேர்தலை நடத்தியிருக்காது என்று பகாங் மாநில பக்கத்தான் ஹராப்பான் தலைவர் கூறினார்.

பதினைந்தாவது பொதுத் தேர்தலுக்கு வழி விடும் வகையில் அவசர கதியில் நாடாளுமன்றத்தைக் கலைக்க தேசிய முன்னணி எடுத்த முடிவு காரணமாக வெள்ளம் போன்ற எதிர்பாரா நிகழ்வுகளை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு நாடு இலக்காகியுள்ளது என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

பாரிசான் அரசாங்கம் நாட்டைக் காக்க விரும்புகிறதா? பெரிக்கத்தான் நேஷனல் கட்சிதான் நாட்டைக் காக்க விரும்புகிறதா? பாரிசான் உண்மையில் நாட்டைக் காக்க விரும்பியிருந்தால் தற்போதைக்கு அது தேர்தலை நடத்த முற்பட்டிருக்காது. மழையும் வெள்ளமும் ஏற்படும் என்று நாம் கூறவில்லை. மலேசிய வானிலை ஆய்வுத் துறைதான் அந்த தகவலை வெளியிட்டிருக்கிறது என்றார் அவர்.

வெள்ளப் பிரச்னையைக் கையாள்வதில் கவனம் செலுத்தும்படி மாட்சிமை தங்கிய மாமன்னர் கூட வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தை கலைக்கும் போது அரண்மனை வெளியிட்ட அறிக்கையைப் பாருங்கள். ஆனால் நாங்கள் மாமன்னருடன் மோதுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறுகிறார் என சிலாங்கூர் மந்திரி பெசாருமான அவர் தெரிவித்தார்.

மெந்தகாப் சட்டமன்ற சமூக சேவை மையத்தில் நேற்றிரவு நடைபெற்ற பகாங் மாநில நிலையிலான ஹராப்பான் பிரசார பயணத் தொடர் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஹராப்பான் அரசாங்கம் வலுவற்றதாக இருந்த காரணத்தால் 22 மாதங்கள் மட்டுமே அதனால் தாக்குபிடிக்க முடிந்ததாக கூறப்படுவதையும் அவர் வன்மையாகச் சாடினார்.

நாங்கள் 22 மாத காலம்தான் தாக்குபிடிக்க முடிந்தது என்றால், பெரிக்காத்தான் நேஷனல் 17 மாதங்களும் பாரிசான் நேஷனல் 14 மாதங்களும் மட்டுமே தாக்குபிடிக்க முடிந்தது என்பதையும் அவர் சுட்டிக்கட்டினார்.


Pengarang :