ECONOMYNATIONAL

 பகாங் ஹராப்பான் பிரசாரக் கூட்டத்தில் மழைக்கு மத்தியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்

மெந்தகாப், அக் 20- இங்கு நேற்றிரவு நடைபெற்ற பகாங் மாநில நிலையிலான பக்கத்தான் ஹராப்பான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மழைத் தூறலையும் பொருட்படுத்தாது ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

பதினைந்தாவது பொதுத் தேர்தலுக்கு தயாராகும் பொருட்டு இங்குள்ள மெந்தகாப் சட்டமன்றத் தொகுதி சேவை மைய வளாகத்தில் இரவு 8.00 மணி தொடங்கி நள்ளிரவு 12.00 மணி வரை இந்த பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

பக்கத்தான் ஹராப்பான் கூட்டணித்  தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பகாங் மாநில ஹராப்பான் தலைவரும் சிலாங்கூர் மந்திரி புசாருமான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து உரையாற்றினர்.

அமானா கட்சியின் தலைவர் முகமது சாபு, ரவூப் நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ஜூல்புரி ஷா மற்றும் குவாந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் பவுசியா சலோ ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்ட இதரத் தலைவர்களாவர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய டத்தோஸ்ரீ அன்வார், இந்த பிரசார கூட்டத்திற்கு வருகை புரிந்த ஹராப்பான் ஆதரவாளர்களின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறானது என்றும் மாற்றத்தை காண அவர்கள் விரும்புவதை இது காட்டுகிறது என்றும் கூறினார்.

மாற்றத்தைக் காண மெந்தகாப் தயாராகி விட்டதை இது காட்டுகிறது. நான் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மழைக்கு மத்தியிலும் அவர்கள் கலையாமல் நிற்கின்றனர் என்றார் அவர்.

இந்த கூட்டத்திற்கு வந்தவர்களைப் பாருங்கள். 90 விழுக்காட்டினர் சாதாரண மக்கள். அவர்களின் தோற்றமும் உடையும் மிகவும் எளிமையாக உள்ளது. ஹோட்டல்களில் நடத்தப்படும் அம்னோ கூட்டங்களுடன் ஒப்பிடுகையில் இது முற்றிலும் மாறுபட்டது என அவர் வர்ணித்தார்.


Pengarang :