ECONOMYNATIONAL

சனிக்கிழமை தேர்தல்- அதிக வாக்குகள் பதிவாக வாய்ப்பு- ஆய்வுக் கழகம் கணிப்பு

ஷா ஆலம், அக் 20- பதினைந்தாவது பொதுத் தேர்தல் சனிக்கிழமை நடைபெறவுள்ள காரணத்தால் அதிக வாக்குகள் பதிவாகும் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த பதிமூன்றாவது பொதுத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை (5-5-2013) நடத்தப்பட்ட போது 84.84 விழுக்காட்டு வாக்குகள் பதிவானதன் அடிப்படையில் இவ்வாறு கணிக்கப்படுவதாக டாருள் ஏசான் கழகத்தின் (ஐ.டி.இ.) ஆராய்ச்சி பிரிவு நிர்வாக கைருள் அரிபின் முகமது முனிர் அறிக்கை ஒன்றில் கூறினார்.

எனினும், கடந்த 14வது பொதுத் தேர்தல் புதன் கிழமை நடத்தப்பட்டதால் (9-5-2018) 82 விழுக்காட்டு வாக்குகள் மட்டுமே பதிவானதாக அவர் சொன்னார்.

வார நாட்களை விட வார இறுதியில் (சனி அல்லது ஞாயிறு) தேர்தல் நடத்தப்படுவதையே பெரும்பாலான மலேசியர்கள் விரும்புவதை ஆய்வுகள் நடப்பு நிலவரங்களும் காட்டுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 1959 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஐந்து முறை பொதுத் தேர்தல்கள் சனிக்கிழமை நடத்தப்பட்டுள்ளன. 14வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இடைத் தேர்தல்கள் சனிக்கிழமை நடைபெறுவது வழக்கமாகி விட்டது என அவர் மேலும் சொன்னார்.

பதினைந்தாவது பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் நவம்பர் 5ஆம் தேதியும் முதல் கட்ட வாக்களிப்பு நவம்பர் 15ஆம் தேதியும் வாக்களிப்பு நவம்பர் 19ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.


Pengarang :