ECONOMYNATIONAL

ஹராப்பான் தேர்தல் கொள்கையறிக்கை மக்கள் சுமையைக் குறைப்பதில் கவனம் செலுத்தும் 

ஈப்போ, அக் 21- பக்கத்தான் ஹராப்பான் ஆட்சியின் போது கண்கூடாக கண்ட மக்களின் பிரச்னைகள் 15வது பொதுத் தேர்தலுக்கான பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் தேர்தல் கொள்கையறிக்கையில் முக்கிய இடத்தைப் பெறும்.

ஹராப்பான் கூட்டணிக் கட்சிகளான கெஅடிலான், பார்ட்டி அமானா ராக்யாட், அப்கோ கட்சி மற்றும் ஜசெக இடையில் காணப்பட்ட கருத்திணக்கத்தின் அடிப்படையில் மக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான உதவித் திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று அக்கூட்டணியின் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் இஸ்மாயில் நசுத்தியோன் கூறினார்.

மக்கள் சரியான தேர்வை செய்வதற்கான அரிய சந்தர்ப்பமாக 15வது பொதுத் தேர்தல் விளங்குகிறது. நமது எதிர்ப்பாளர்கள் இன மற்றும் சமய உணர்வுகளை வைத்து விளையாடுகின்றனர். நாம் அவர்களின் தாளத்திற்கேற்ப ஆடவேண்டியதில்லை என்று அவர் சொன்னார்.

நாம் மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முன்வந்துள்ளோம். நமது தேர்தல் கொள்கையறிக்கையை வேட்பு மனுத்தாக்கலுக்கு முன்பாக வெளியிடுவோம் என்றார் அவர்.

நேற்று இங்கு நடைபெற்ற ஹராப்பான் கூட்டணியின் மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார். இந்த மாநாட்டில் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், துணைத் தலைவர் முகமது சாபு, அந்தோணி லோக், டத்தோஸ்ரீ வில்ப்ரட் மேடியஸ் தாங்காவ் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.

இதனிடையே, இந்நிகழ்வில் உரையாற்றிய ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக், தங்கள் கட்சி ஹராப்பான் கூட்டணிக்கு விசுவாசமாக இருக்கும் என்பதோடு ஊழலுக்கு எதிரான தங்களின் 20 ஆண்டுகாலப் போராட்டத்தைத் தொடரும் என்றும் தெரிவித்தார்.

அனைத்து இனங்களையும் உட்படுத்திய அரசியல் போராட்டத்தை அன்வார் முன்னெடுத்துள்ளார் என்பது இதில் முக்கிய விஷயமாகும். பல்லின மக்களின் உரிமை காக்கும் அரசியல் அமைப்பாக ஹராப்பான் விளங்குகிறது என்று அவர் சொன்னார்.


Pengarang :