ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பேராசை கொண்ட தலைவர்கள் தேசத்தின் அழிவுக்கு வித்திடுவார்கள்- சுல்தான் எச்சரிக்கை

ஷா ஆலம், அக் 22 – அதிகாரத்தையும் செல்வத்தையும் மட்டுமே தேடும் தலைவர்கள் மக்களையும் நாட்டையும் நாசப்படுத்துபவர்களாகவும் துரோகிகளாகவும் இருப்பார்கள் என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடீன் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ்  நினைவுபடுத்தினார்.

துரோகம், ஏமாற்று மற்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் தலைவர்கள் மக்களால் வெறுக்கப்படுவார்கள் என்றும் அவர்களின் தவறான செயல்கள் நாட்டை அழிக்க கூடும் என்பதால் எல்லாம் வல்ல இறைவனால் தண்டிக்கப்படுவார்கள் என்று அவர் சொன்னார்.

உண்மையில், நேர்மை மற்றும் நம்பிக்கையை நிலைநாட்டாத தலைவர்கள் சமூகத்தையும் நாட்டையும் அழிக்கக்கூடிய ஊழல், அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கை துரோகம் மற்றும் அவதூறு போன்ற  ஒழுக்கக்கேடான செயல்களில்  ஈடுபடுவார்கள் என்று அரச முகநூல் பதிவில் அவர் குறிப்பிட்டார்.

நேர்மை மற்றும் நம்பகத்தன்மை கொண்ட தலைவர்கள் சமூக வாழ்வு சுற்றுச்சூழல் அமைப்பை மாற்றுவது மட்டுமல்லாமல்  நிலையான மற்றும் மரியாதைக்குரிய இலக்கை அடைய தேசத்தை வழிநடத்துவார்கள் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.நேர்மையும் நம்பகத்தன்மையும் தலைவர்களின் அடையாளத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

தங்களுக்கு அளிக்கப்பட்ட நம்பிக்கையை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.அவர்கள் கண்ணியத்தோடு நற்குணம்  மற்றும் நேர்மையை வெளிப்படுத்த வேண்டும். இத்தகையோர் மக்களின் நம்பிக்கையைப் பெறுவார்கள். இதன் மூலம் உலகின் பிற நாடுகளிடம் இருந்து மரியாதையைப் பெறலாம் என்றார் அவர்


Pengarang :