ECONOMYMEDIA STATEMENTSELANGOR

வீடு வாங்குவோருக்கு முன்பணம்- 2023 பட்ஜெட்டில் புதிய திட்டம் அறிவிக்கப்படும்

சிப்பாங், அக் 30– குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு வீடு வாங்குவதற்கான முன்பணம் வழங்குவது தொடர்பான திட்டம் வரும் 2023 வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்படவுள்ளது.

அதிகமானோர் சொந்த வீட்டைப் பெறுவதற்கு உதவும் நோக்கில் மாநில அரசு மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டம் அமைவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

வரும் நவம்பர் 25ஆம்  தேதி தாக்கல் செய்யப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் இதன் தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளோம். வீடு வாங்குவோர் முன்பணம் பெறுவதற்கான உதவியை நாங்கள் வழங்குவோம் என அவர் குறிப்பிட்டார்.

முன்பு வீட்டை தயார் செய்வதில் நாம் பிரச்னையை எதிர்நோக்கினோம். இப்போது அப்பிரச்னைக்கு தீர்வு கண்டு 30,000 முதல் 60,000 வீடுகளை தயார் செய்து விட்டோம். இப்போது வீட்டிற்கான முன்பணம் செலுத்துவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் சொந்த வீட்டைப் பெறுவதற்கு ஏதுவாக முன்பணம் தொடர்பான விஷயத்தில் உதவ விரும்புகிறோம் என்றார் அவர்.

நேற்று இங்கு ரூமா இடாமான் மெலோர் வீடமைப்பு த் திட்டதை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டம் வரும் நவம்பர் 23 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இரு தினங்களுக்குப் பின்னர் அதாவது 25 ஆம் தேதி 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படும்.


Pengarang :