கொலை முயற்சியிலிருந்து பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உயிர்த் தப்பினார்

புது டில்லி, நவ 4- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நேற்று நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் உயிர்த்தப்பினார். பேரணிக்கு தலைமையேற்று இஸ்லாமாபாத் நோக்கி சென்று கொண்டிருந்த போது அவர் காலில் சுடப்பட்டார்.

இம்ரான் கானின் உடல் நிலை சீராக உள்ளது. அவரின் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவரால் பேசவும் முடிகிறது என்று லாகூர் ஷாவுகாட் கானும் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் பைசால் சுல்தான் கூறினார்.

புதிய தேர்தலை நடத்த கோரி இஸ்லாமாபாத் நோக்கி சென்ற பேரணிக்கு தலைமை தாங்கிய இம்ரான் கான் பஞ்சாப் மாநிலத்தின் வாஸிராபாட் நகரில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.

தனது பாகிஸ்தான் தொரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவர்களோடு அவர் வாகனம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது இத்தாக்குதல் நிகழ்ந்தது.

வெளிநாட்டு அரசுகள், இஸ்மாமிய மாநாட்டு நிறுவனம், (ஓ.ஐ.சி.) அமெரிக்கா, கனடா, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளும் இந்த தாக்குதலை கண்டித்துள்ளன.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும்படி பஞ்சாப் முதலமைச்சர் சவுத்ரி பெர்வேஸ் எலாஹி உத்தரவிட்டுள்ளார்


Pengarang :