ECONOMYSELANGOR

தே.மு. கோட்டையான தஞ்சோங் காராங்கில் களம் காண மூடா கட்சி வேட்பாளர் அஞ்சவில்லை

தஞ்சோங் காராங், நவ 8- தேசிய முன்னணியின் கோட்டையாக விளங்கும் தஞ்சோங் காராங்கில் போட்டியிட மலேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் (மூடா) வேட்பாளரான சித்தி ரஹாயும் பாஹ்ரின் சிறிதும் அஞ்சவில்லை.

எது எப்படி இருப்பினும் வரும் 19 ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையைத் தாம் கொண்டுள்ளதாக சேகு ரஹாயு என அடைமொழியுடன் அழைக்கப்படும் அவர் சொன்னார்.

இத்தேர்தலில் தஞ்சோங் காராங் தொகுதியை தேசிய முன்னணியிடமிருந்து வெல்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. எனினும் கண்ணியத்துடனும் முழு அர்ப்பண உணர்வுடனும் பிரசாரம் செய்வதன் மூலம் இத்தொகுதியில் சாதனை படைக்க முடியும் என நம்புகிறேன் என அவர் குறிப்பிட்டார்.

தங்கள் மீது முழு நம்பிக்கை வைத்துள்ள ஆதரவாளர்களை தேசிய முன்னணி கொண்டுள்ளது. இதனை அவ்வளவு எளிதாக மாற்றி விட முடியாது. கண்ணியத்துடனும் முழு அர்ப்பணிப்புடனும் பிரசாரம் செய்வதன் மூலம் நாம் நிர்ணயித்த இலக்கை அடைய முடியும் என அவர் கூறினார்.

தஞ்சோங் காராங் தொகுதிக்கு நான் செய்ய நினைப்பதை தொகுதி மக்கள் மதிப்பீடு செய்து என்னைத் தேர்ந்தெடுப்பார்கள் என நம்புகிறேன் என்று நேற்று இங்கு நடைபெற்ற மூடா கட்சியின் பிரசார நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

தாம் உள்ளூர் வேட்பாளர் அல்ல என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், மக்களுக்கு சேவையாற்றுவதில் இது ஒரு தடையாக இருக்காது என்றார். தற்போதுள்ள பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் சம்பந்தப்பட்ட தொகுதியைச் சாராதவர்கள்தான். இருந்த போதிலும் சிறப்பான சேவையை வழங்கி வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :