ECONOMYMEDIA STATEMENT

சொத்துக்களை அறிவிப்பது வெறும் நாடகமல்ல, எங்கள் வெளிப்படைப் போக்கின் அடையாளம்- அமிருடின்

ஷா ஆலம், நவ 16- பதினைந்தாவது பொதுத் தேர்தலில் போட்டியிடும் கெஅடிலான்  வேட்பாளர்கள் தங்கள் சொத்துகளை அறிவிப்பது அக்கட்சியின் வெளிப்படைப் போக்கை நிரூபிக்கும் வகையில் உள்ளது.

இந்நடவடிக்கையானது  வாக்குகளைப் பெறுவதற்காக செய்யப்படும் நாடகமோ வெற்று தம்பட்டமோ அல்ல என்று கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சொத்துக்களை முன்வந்து அறிவிக்கிறோம் என்றால், நாங்கள் வெளிப்படையாக இருக்கிறோம் என்று அர்த்தம். மக்கள் பிரதிநிதிகளின் வேலை என்ன? அவர்கள் எப்படி திடீரென பணக்காரர்கள் ஆனார்கள்? வீடு,கார், மனைவிகளின் எண்ணிக்கை எவ்வாறு அதிகரித்தது என்பதை மக்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என அவர் சொன்னார்.

இவை அனைத்தையும் மக்கள் தெரிந்திருக்க வேண்டும். காரணம், அவர்கள் வரி செலுத்துபவர்கள். மக்கள் பிரதிநிதிகளின் சம்பளம் மற்றும் அலவன்ஸ் யாவும் மக்களின் வரிப்பணத்திலிருந்து வழங்கப்படுகிறது என்று நேற்று தாமான் சவுஜானா உத்தாமாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

அனைத்து கெஅடிலான் வேட்பாளர்களும் 1960ஆம் ஆண்டு ஒப்புதல் சட்டத்தின் கீழ் சொத்துக்களை அவசியம் அறிவிக்க வேண்டும் என்று கட்சியின் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.

இது குறித்து கருத்துரைத்த பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங், கெஅடிலான் கட்சியின் இந்த நிபந்தனை முட்டாள்தனமானது என்றும் மக்களிடம் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் நோக்கிலானது என்று குறை கூறியிருந்தார்.

 


Pengarang :