ECONOMYSELANGOR

கோம்பாக் தொகுதியில் வெற்றிக்கான அறிகுறி- ஹராப்பான் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்

கோம்பாக், நவ 18- நாட்டின் பதினைந்தாவது பொதுத் தேர்தலுக்கான பரப்புரைகள் முடிவுக்கு வர 24 மணி நேரமே எஞ்சியுள்ள நிலையில் வேட்பாளர்களின் இறுதிக்கட்ட பிரசார நடவடிக்கைகள் மேலும் தீவிரமடைந்துள்ளன.

கோம்பாக் தொகுதியில் நேற்று நடைபெற்ற ஹராப்பான் தேர்தல் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டது அத்தொகுதியில் மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது.

நேற்றிரவு பிங்கிரான் பத்து கேவ்சில் நடைபெற்ற ஹராப்பான் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் அக்கூட்டணி வேட்பாளர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு தங்களின் ஒருமித்த ஆதரவை புலப்படுத்தினர்.

இக்கூட்டத்தில் தலைவர்களின் உணர்ச்சிமிகு உரைகளுக்கு மத்தியில் “ரிபோர்மாசி“, “லவான் தெத்தாப் லவான்“, “கித்தா போலே“ என்ற முழக்கங்கள் தொடர்ந்து ஒலித்த வண்ணம் இருந்தது.

இக்கூட்டத்தில் உரையாற்றிய அமிருடின், திருடர்களுடன் கூட்டு சேர்ந்த துரோகி தங்களைப் பிரதிநிதிப்பதை கோம்பாக் மக்கள் இனியும் விரும்பவில்லை என்பதோடு மாற்றத்தைக் காணவும் அவர்கள் தயாராகி விட்டனர் என்று சொன்னார்.

கோம்பாக் மக்களுக்கு சுயகௌரவம் உள்ளது. வரும் நவம்பர் 19ஆம் தேதி அவர்கள் நல்ல முடிவை எடுப்பார்கள். நம்பிக்கை வைத்து வாய்ப்பு வழங்கிய தங்களுக்கு துரோகம் இழைத்தவர்களை அவர்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, கட்சியில் நிகழ்ந்த துரோகங்களுக்கு முடிவு கட்டுவதற்கு நாளை நடைபெறும் தேர்தலை சரியான களமாகும் என்று கெஅடிலான் கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

நமது வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயமாக அஸ்மின் அலி இருந்து விட்டு போகட்டும். வரும் சனிக்கிழமை வாக்குச் சீட்டில் ஒன்றாம் எண்ணுக்கு (அஸ்மின்) மட்டும் பெருக்கல் குறியிடாதீர்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :