ECONOMYSELANGOR

சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவினால் பணம், பதவி தருவதாக மொகிடின் கூறினார்- அமிருடின் அம்பலம்

கோம்பாக், நவ 18- பணம் மற்றும் பதவிகளைத் தருவதாக ஆசை வார்த்தைக் காட்டி சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவதற்கு உதவி செய்யுமாறு டான்ஸ்ரீ மொகிடின் யாசின் தன்னைக் கேட்டுக் கொண்டதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

எனினும், முன்னாள் பிரதமரின் அந்த கோரிக்கையை தாம் நிராகரித்து விட்டதாக மாநில பக்கத்தான் ஹராப்பான் தலைவருமான அவர் சொன்னார்.

சிலாங்கூர் மாநில அரசு நிலைத்தன்மையற்றதாக ஆகக் கூடாது என்பதற்காக அந்த துரோகக் கும்பலுடன் ஒத்துழைக்க தாம் மறுத்து விட்டதாக அவர் சொன்னார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி ஷெரட்டோன் நகர்வு நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் பெரிக்கத்தான் தலைவர் டான்ஸ்ரீ மொகிடின் யாசினை தாம் அவரது இல்லத்தில் சந்தித்ததாக அமிருடின் தெரிவித்தார்.

இந்த கோரிக்கையை சிலாங்கூர் ஏற்காது என்று நான் டான்ஸ்ரீயிடம் கூறி விட்டேன். மக்களுக்கு துரோகமிழைப்பதில்லை என்று நானும் சக சட்டமன்ற உறுப்பினர்களும் செய்த உறுதிமொழியில் நாங்கள் உறுதியாக இருந்தோம் என மாநில மந்திரி புசாருமான அவர் தெரிவித்தார்.

மாநில அரசு நிலையற்றதாக ஆகிவிடும் என நான் அஞ்சினேன். நான் எதிர்பார்த்தது போல் பேராக், கெடா, ஜொகூர் ஆகிய மாநிலங்கள் வீழ்ந்தன என்று பிங்கிரான் பத்துகேவ்சில் நேற்று நடைபெற்ற ஹராப்பான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் கூறினார்.

நான் எண்ணியது போலவே டத்தோஸ்ரீ அகமது பைசால் அசுமு பேராக் மந்திரி புசார் பதவியிலிருந்து வீழ்த்தப்பட்டார். அவரை யார் வீழ்த்தியது? பக்கத்தான் ஹராப்பான் அல்ல, அம்னே/பாரிசான்தான் வீழ்த்தியது என்றார் அவர்.

அமானா, ஜசெக மற்றும் கெஅடிலான் சட்டமன்ற உறுப்பினர்களை தன்வசம் ஈர்க்கும்படியும் அவர்களுக்கு மாதம் 10,000 வெள்ளியும் அரசு சார்பு நிறுவனங்களில் (ஜி.எல்.சி.) பதவியும் தருவதாக மொகிடின் ஆசை வார்த்தை கூறினார் என அமிருடின் மேலும் சொன்னார்.


Pengarang :