ECONOMY

வார நாட்களில் நடத்தப்பட்ட போதிலும் மாநில அரசின் மலிவு விற்பனைக்கு அமோக வரவேற்பு

குவாங், நவ 30- வார நாளாக இருந்த போதிலும் இன்று இங்குள்ள டத்தாரான் செத்தியா கம்போங் செத்தியாவில் நடத்தப்பட்ட சிலாங்கூர் மாநில அரசின் மலிவு விற்பனைக்கு பொது மக்களிடமிருந்து அமோக ஆதரவு கிடைத்தது.

இந்த ஜெலாஜா ஏசான் ராக்யாட் திட்டத்தில் பங்கு கொள்ள பொது மக்கள் காலை 7.00 மணி முதல் வரிசையில் காத்திருந்ததாக சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) தோட்டப் பிரிவு துணைத் தலைமை நிர்வாகி ராஜா முகமது பயாஸ் ராஜா பஸாய்ட் கூறினார்.

இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்ட அனைத்து பொருள்களும் ஒன்றரை மணி நேரத்தில் விற்று முடிந்தாக அவர் சொன்னார். பொது மக்கள் காலை 7.00 மணி முதல் வரிசையில் காத்திருந்த காரணத்தால் வழக்கத்தைக் காட்டிலும் 30 நிமிடங்கள் முன்னதாகவே விற்பனையைத் தொடங்கினோம்.

காலை 10.00 மணிக்குள் 300 கோழிகள், 200 தட்டு முட்டைகள் விற்கப்பட்டு விட்டன. அடுத்த ஒரு மணி நேரத்தில் 500 கோழிகளும் 300 தட்டு முட்டைகளும் விற்கப்பட்டு விட்டன என்று
அவர் தெரிவித்தார்.

இந்த விற்பனையில் அதிகமானோர் பங்கு பெற வேண்டும் என்பதற்காக ஒரு நபருக்கு 2 கோழிகள் மற்றும் ஒரு தட்டு முட்டை என கட்டுப்படுத்தி விட்டோம். கூடுதலாக இப்பொருள்களை வாங்க விரும்புவோர் மறுபடியும் வரிசையில் நின்று வாங்க அனுமதிக்கப்பட்டனர் என்றார் அவர். பி.கே.பி.எஸ். ஏற்பாட்டில் நடைபெறும் இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் 5
கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் விற்கப்படுகின்றன.


Pengarang :