ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரில் முட்டை, சமையல் எண்ணெய் விநியோகம் போதுமான அளவு உள்ளது

ஷா ஆலம், டிச 5- சிலாங்கூரில் முட்டை மற்றும் ஒரு கிலோ மானிய விலை சமையல் எண்ணெய் விநியோகம் போதுமான அளவு உள்ளதாக மாநில மக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அத்தியாவசிய உணவு மூலப் பொருள்களுக்கு பற்றாக்குறை நிலவினாலும் அது தற்காலிகமானதாகவும் குறிப்பிட்ட சில இடங்களை மட்டுமே உள்ளடக்கியதாகவும் இருக்கும் என்று உள்நாட்டு வாணிக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் சிலாங்கூர் மாநில அமலாக்கப் பிரிவு தலைவர் முகமது கைரில் ஜமாலுடின் கூறினார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இப்பொருள்களின் விநியோகம் விரைவில் சீர் செய்யப்படும் என்று இன்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

முட்டை விற்பனைக்கு கட்டுப்பாடு நிலவுகிறது என்பதை மறுக்க இயலாது. எனினும், இப்பிரச்னை கடுமையானதாக இல்லை. இப்பிரச்னையைக் களைய தங்களுக்கு தேவையான அளவு மட்டுமே பொருள்களை வாங்கும்படி பயனீட்டாளர்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.

சந்தையில் உணவுப் பொருள் பற்றாக்குறை ஏற்படும் அளவுக்கு பதட்டத்தில் அதிக எண்ணிக்கையில் பொருள்களை வாங்கிக் குவிக்க வேண்டாம் எனவும் பொது மக்களை அவர் அறிவுறுத்தினார்.

மாநிலத்தில் பைகளில் விற்கப்படும் ஒரு கிலோ சமையல் எண்ணைய் விநியோகம் போதுமானதாகவும் பயனீட்டாளர்களின் தேவையை ஈடு செய்யக்கூடிய அளவிலும் உள்ளது தமது தரப்பு மேற்கொண்ட சோதனையில் தெரியவந்துள்ளது என்றார் அவர்.

இந்த மானிய விலை சமையல் எண்ணெய் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஒரு பயனீட்டாளருக்கு கூடுதல் பட்சம் மூன்று பாக்கெட் என விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :