ALAM SEKITAR & CUACA

சிலாங்கூர் உட்பட ஐந்து மாநிலங்களில் வெள்ள அபாயம்

கோலாலம்பூர், டிச 8: சிலாங்கூர், பேராக், ஜோகூர், கெடா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் உள்ள பல பகுதிகளில் 24 மணி நேரத்திற்குள் திடீர் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்பாசன மற்றும் வடிகால் துறை (ஜேபிஎஸ்) தயார்நிலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா), தென்கிழக்கு ஆசியா-ஓசியானியா ஃப்ளாஷ் வெள்ள வழிகாட்டுதல் அமைப்பு (SAOFFGS) மற்றும் நீர்பாசன மற்றும் வடிகால் துறையின் (ஜேபிஎஸ்) வெள்ள முன்னறிவிப்பு ஆகிய தகவல்கள் அடிப்படையில் நேற்று வெள்ளத் தயார் நிலை அறிவிப்பு வெளியிட்டது. கனமழை அல்லது குறிப்பிடத்தக்க இடியுடன் கூடிய மழை பெய்தால், பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது.

சிலாங்கூரில், உலு சிலாங்கூர் மாவட்டம் (உலு பெர்ணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்), கிள்ளான் மாவட்டம் (கிள்ளான், காப்பார் டவுன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்) மற்றும் கோலா சிலாங்கூர் மாவட்டம் (பெஸ்தாரி ஜெயா டவுன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்) ஆகிய இடங்களில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புண்டு.

பேராக்கில், பதாங் பாடாங் மாவட்டம் (சுங்காய் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்), லாரூட், மாத்தாங் மற்றும் செலாமா மாவட்டங்கள் (புக்கிட் கந்தாங், சுங்கை லிமாவ், பெங்கலான் அவூர், ஜெலபாங், ஆசம் கும்பாங் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்), முவாலிம் மாவட்டம் ( உலு பெர்ணம் திமோர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்) மற்றும் மத்திய பேராக் மாவட்டம் (பாசிர் பஞ்சாங் உலு, லயாங்-லாயாங் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்) ஆகியவை வெள்ளத்தால் பாதிக்கப் படும் அபாயத்தில் உள்ளது.

கெடாவில், யான் மாவட்டம் (குவார் செம்பேடாக் நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதி) மற்றும் ஜோகூரில் மூவார் மாவட்டம் (ஸ்ரீ மெனந்தி மற்றும் சுற்றியுள்ள பகுதி) ஆகியவையும் பாதிப்படையக் கூடும்.

சரவாக்கின் ஒரு பகுதி அபாய நிலையில் உள்ளது. அவ்விடங்கள் சமரஹான் உள்ளடக்கிய தாமான் ரெசிடன், முவாரா துவாங் தேசிய பள்ளி, தஞ்சோங் பன்டோங் கிராமம், தாமான் யூனி கார்டன், முவாரா துவாங் III பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் ஆகும்.

“அனைத்து குடியிருப்பாளர்கள் குறிப்பாக ஆபத்தில் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விழிப்புடன் இருக்க இந்த தயார்நிலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு https://publicinfobanjir.water.gov.my, முகநூல் @PublicInfoBanjir மற்றும் ட்விட்டர் @JPS_InfoBanjir போன்ற பக்கங்களை பொதுமக்கள் பார்வையிடலாம்.

இதற்கிடையில், மெட்மலேசியா கிளந்தான் மற்றும் திராங்கானுவில் நேற்று தொடங்கி வெள்ளிக்கிழமை வரை தொடர் கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

-பெர்னாமா


Pengarang :