ALAM SEKITAR & CUACA

அடை மழை தொடர்ந்தால் சிலாங்கூரின் மூன்று மாவட்டங்களில் வெள்ள அபாயம்- ஜே.பி.எஸ். எச்சரிக்கை

ஷா ஆலம், டிச 12- அடை மழை தொடர்ந்து பெய்து வந்தால் சிலாங்கூர்
மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம்
உள்ளதாக வடிகால் மற்றும் நீர் பாசனத் துறை (ஜே.பி.எஸ்.)
எச்சரித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் இத்தகைய அபாயத்தை எதிர்நோக்க தயாராக
இருக்கும்படி சிப்பாங், பெட்டாலிங் மற்றும் கிள்ளான் மாவட்ட மக்களை
அது கேட்டுக் கொண்டது.

சிப்பாங் மாவட்டத்தைப் பொறுத்தவரை டிங்கில், சிப்பாங் துணை
மாவட்டங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம்
ஏற்படும் சாத்தியம் உள்ளதாக அத்துறை வெளியிட்ட அறிக்கை ஒன்று
கூறியது.

பெட்டாலிங் மாவட்டத்தில் பத்து தீகா, ஷா ஆலம் மற்றும் அதனைச்
சுற்றியுள்ள பகுதிகள் வெள்ள அபாயத்தை எதிர்நோக்கக் கூடும் எனவும்
அது குறிப்பிட்டது.

கிள்ளான் மாவட்டத்திலுள்ள பண்டமாரான், பெக்கான் காப்பார், கிள்ளான்
மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் பாதிக்கப்படுவதற்கான சாத்தியம்
உள்ளதை அத்துறை கோடி காட்டியது.

மேலும், ஜோகூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, பகாங், பேராக் ஆகிய
மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடும் என
கணிக்கப்படுகிறது.

வெள்ளப் பாதிப்பு உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மிகுந்த விழிப்புடன்
இருக்கும் அதே வேளையில் வெள்ள நிலவரங்களை அணுக்கமாக
கண்காணித்து வர வேண்டும் என்றும் அந்த அறிக்கை வலியுறுத்தியது.


Pengarang :