ECONOMY

மாணவர்களுக்குப் பள்ளி உபகரணங்கள் வழங்க நிதி ஒதுக்கீடு- மந்திரி புசார் அறிவிப்பு

கோம்பாக், டிச 13- அடுத்தாண்டில் பள்ளி செல்லும் குறைந்த வருமானம்
பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் தேவையை ஈடுசெய்ய
மாநில அரசு கணிசமானத் தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது.

தகுதி உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் பயன் பெறுவதற்கு
ஏதுவாக இந்த வருடாந்திர பள்ளி உபகரணத் திட்டத்தின் அமலாக்கப்
பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கூறினார்.

வரும் பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்படவுள்ள மீண்டும் பள்ளிக்குச்
செல்வோம் திட்டத்திற்கான நிதி செலவினம் குறித்து தற்போது நாங்கள்
ஆராய்ந்து வருகிறோம். இந்நோக்கத்திற்காக மாநில அரசு ஆண்டுதோறும்
நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது என்று அவர் சொன்னார்.

இது தவிர, யாயாசான் அனாக் வாரிசான் சிலாங்கூர் அமைப்பும் பள்ளி
செல்லும் தனது உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு உதவுவதற்கான
திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. மேலும் அதிகமான மாணவர்கள்
பயன்பெறுவதற்கு ஏதுவாக இத்திட்டங்களை நாங்கள்
ஒருங்கிணைக்கவுள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள கம்போங் சுங்கை புசுவில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட
வீட்டைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.

மாநில அரசின் துணை நிறுவனமான மந்திரி புசார் கட்டமைப்பும்
(எம்.பி.ஐ.) பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோர்கள்
எதிர்நோக்கும் சுமையைக் குறைக்கும் திட்டங்களை அமல்படுத்தி
வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தலா 30,000
வெள்ளியை எம்.பி.ஐ. ஒதுக்கீடு செய்கிறது. இதன் மூலம் தொகுதியிலுள்ள300 மாணவர்கள் தலா 100 வெள்ளிக்கான பற்றுசீட்டினைப் பெறுவதற்குரிய
வாய்ப்பினைப் பெறுகின்றனர்.


Pengarang :