ECONOMY

தொலைத் தொடர்பு சேவைக் கட்டணத்தை குறைக்க நிறுவனங்களுடன் அமைச்சு பேச்சு

கோலாலம்பூர், டிச 15- நாட்டில் தொலைத் தொடர்பு சேவைக்
கட்டணங்களைக் குறைப்பது தொடர்பில் தொலைத் தொடர்பு
நிறுவனங்களுடன் தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு பேச்சு நடத்தி
வருகிறது.

குறைந்த கட்டணத்திலான தொலைத் தொடர்பு சேவையை எதிர்பார்க்கும்
மக்களுக்கு உதவும் வகையில் ஆய்வினை மேற்கொள்ளும்படி மலேசியத்
தொடர்பு மற்றும் பல்லுடக ஆணையம் மற்றும் தொலைத் தொடர்பு
நிறுவனங்களைத் தாம் கேட்டுக் கொண்டுள்ளதாக அதன் அமைச்சர்
பாஹ்மி ஃபாட்சில் கூறினார்.

கட்டணக் குறைப்பை அமல்படுத்துவதற்காகத் தொடர்பு மற்றும் பல்லுடக
ஆணையம் மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் நாங்கள் பேச்சு
நடத்தி வருகிறோம். இணைய மற்றும் தொலைபேசி சேவைக்
கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும் என இளைஞர்கள் பெரிதும்
எதிர்பார்க்கின்றனர். இவ்விவகாரத்தில் மாற்றம் செய்வதற்கான
சாத்தியங்களை ஆராயும்படி சம்பந்தப்பட்டத் தரப்பினரை நான் கேட்டுக்
கொண்டுள்ளேன் என அவர் சொன்னார்.

இவ்விவகாரம் தொடர்பில் வரும் வாரங்களில் நான் முக்கிய அறிவிப்பை
வெளியிடுவேன் என நேஷனல் எப்.எம். பேஸ்புக் வாயிலாக ஒளிபரப்பான
அல்பா நிகழ்ச்சியில் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் தொலைத் தொடர்பு சேவையின் தரத்தை மேம்படுத்துவதற்கும்
நாட்டின் சில இடங்களில் மந்தமாகப் காணப்படும் 4ஜி மற்றும் 5ஜி
அலைக்கற்றை அடைவுநிலை பிரச்சனையைக் களைவதற்கும்
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.


Pengarang :