ECONOMYSELANGOR

சிலாங்கூரில் கட்டுப்படுத்தப்பட்ட பொருள்கள் விலையேற்றம் காணவில்லை- அமைச்சு தகவல்

ஷா ஆலம், டிச 26- கிறிஸ்துமஸ் பெருநாள் விலை உச்சவரம்பு திட்டம்
அமல் செய்யப்பட்ட கடந்த மூன்று தினங்களில் சிலாங்கூர் மாநிலத்தில்
கட்டுப்படுத்தப்பட்ட பொருள்கள் விலையேற்றம் காணவில்லை என்பது
உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் சிலாங்கூர்
மாநிலப் பிரிவு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கோல குபு பாரு, கோல சிலாங்கூர், காஜாங், பெட்டாலிங் ஜெயா சிப்பாங்
உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சின் அமலாக்கப் பிரிவினர் மேற்கொண்ட
சோதனையில் இது கண்டறியப்பட்டதாக அமைச்சின் ஊடகப் பிரிவு
கூறியது.

அந்த சோதனையில் பொருள் விலையேற்றம் கண்டறியப்படவில்லை.
எப்போதும் உயர்ந்தபட்ச தொழில் நெறியைப் பின்பற்றி நடக்கும்படி
வர்த்தகர்களுக்கு நாங்கள் எப்போதும் நினைவுறுத்தி வருகிறோம் என அது
தெரிவித்தது.

சட்டத்திற்கு மீறி பொருள்களின் விலையை உயர்த்தும் வணிகர்களுக்கு
எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சு தனது பேஸ்புக்
பதிவில் குறிப்பிட்டது.

இந்த கிறிஸ்துமஸ் பெருநாள் விலை உச்சவரம்பு நடவடிக்கையோடு
ஏ.டி.எம். எனப்படும் கோழி, முட்டை மற்றும் சமையல் எண்ணெய் மீதான
சோதனையும் நடத்தப்பட்டதாக அமைச்சு கூறியது.

இச்சோதனை மேற்கொள்ளப்பட்ட வர்த்தக மையங்களில் கோழி, முட்டை
மற்றும் சமையல் எண்ணெய் கையிருப்பு போதுமான அளவு இருந்தது.
பயனீட்டாளர்களின் தேவையை ஈடு செய்யும் அளவிற்கு போதுமான
அத்தியாவசியப் பொருள் விநியோகம் உள்ளது எனவும் அது குறிப்பிட்டது.

கடந்த 23ஆம் தேதி தொடங்கி நாளை வரை அமலில் இருக்கும் பொருள்
விலை உச்சவரம்பு திட்ட அமலாக்கத்தின் பொது ஆட்டிறைச்சி, முட்டைக் கோசு, உருளைக்கிழங்கு, கேரட் உள்ளிட்ட ஆறு பொருள்களுக்கு
விலைக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.


Pengarang :