ALAM SEKITAR & CUACAECONOMY

ஃபர்தா அணிந்து பள்ளிவாசலில் கைபேசிகளை திருடியதை இளைஞர் ஒப்புக் கொண்டார்

ஷா ஆலம், டிச 29- ஃபர்தாவுடன் பள்ளிவாசல்களில் நுழைந்து இரு பெண்களின் கைபேசிகளை திருடியதாக  இளைஞர் ஒருவர் மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

கடந்த வாரம் இரு பள்ளிவாசல்களில் இக்குற்றத்தைப் புரிந்ததாக கொண்டு வரப்பட்ட இரு குற்றச்சாட்டுகளையும் முகமது அமிருள் ஷாபிக் அப்துல்லா (வயது 20) என்ற அந்த இளைஞர் ஒப்புக் கொண்டார்.

எனினும், குற்றஞ்சாட்டப்பட்டவர் இளம் வயதுடையவர் என்பதால் அவர் மீதான நன்னடத்தை அறிக்கை வரும்வரை மாஜிஸ்திரேட் முகமது  அஸார் ரோசாலி தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

இம்மாதம் 20ஆம் தேதி அதிகாலை 6.25 மணியளவில் இங்குள்ள செக்சன் 18 அல்-அஸாரியா பள்ளிவாசலில் மஸ்னா செலாமாட் என்பவருக்குச் சொந்தமான ஐபோன் எக்ஸ் கைபேசியை திருடியதாக முகமது அமிருளுக்கு எதிரான முதலாவது குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

அதே தினத்தில் இரவு 8.50 மணியளவில் செக்சன் 18 அல்-ஹிடாயா பள்ளிவாசலில் காஸ்முனா அப்துல் ரஹ்மான் என்பவருக்குச் சொந்தமான சம்சுங் இஸட் ஃபிலிப் 3 ரக கைபேசியை கொள்ளையிட்டதாக அவர் மற்றொரு குற்றச்சாட்டையும் எதிர்நோக்கியுள்ளார்.

குற்றவாளி என நீருபிக்கப்பட்டால் பத்தாண்டு வரை  சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் தண்டனைச் சட்டத்தின் 380வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வரும் ஜனவரி 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த மாஜிஸ்திரேட் குற்றஞ்சாட்டப்பட்டவரை 3,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கினார்.


Pengarang :