FILE PHOTO: Brazilian soccer legend and honorary ambassador for the 2014 World Cup Pele smiles during a news conference ahead of the preliminary draw in Rio de Janeiro, Brazil, July 29, 2011. REUTERS/Sergio Moraes
MEDIA STATEMENTSUKANKINI

உலகின் புகழ் பெற்ற காற்பந்து நட்சத்திரம் பெலே காலமானார்

சாவ் பவ்லோ, டிச 30 –  பிரேசிலின் காற்பந்து நட்சத்திரம் பெலே  தனது  82 வயதில்  நேற்று  காலமானார்.  புற்றுநோயின் காரணமாக  சாவ் பாலோ,  அல்பர்ட் என்ஸ்டின்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  அவர்  உள்ளூர் நேரப்படி நேற்று  மாலை மணி 3.27 அளவில் உயிரிழந்தார்.
அவர் குடல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்தார், மூன்று முறை உலகக் கிண்ணத்தை வென்ற உலகின் ஒரே காற்பந்து விளையாட்டாளர் என்ற பெருமையையும்   அவர் பெற்றுள்ளார்.  

வறுமையின் காரணமாக காலணிகூட வாங்க முடியாமல்  வெறுங்காலுடன் தமது 15 
வயதில் பிரேசில் குழுவுக்கு  பேலே விளையாடத் தொடங்கினார்.  

1958 ஆம் ஆண்டு  சுவிடனில் நடைபெற்ற உலகக் கிண்ண காற்பந்து  போட்டியில்  
முதல் முறையாக  தமது  17 வயதில்  அவர்  பிரேசில் குழுவுக்கு விளையாடி வெற்றியை தேடித் தந்தார்.   நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு  சிலியில் நடைபெற்ற  உலகக் கிண்ண காற்பந்து போட்டியிலும் அவர் பிரேசிலுக்கு வெற்றியை தேடித் தந்தார். 

கடந்த  1970 ஆம் ஆண்டு  மெக்சிக்கோவில் நடைபெற்ற  உலகக் கிண்ண காற்பந்து போட்டியிலும் அவர் பிரேசில் குழுவுக்கு  மூன்றாவது முறையாக உலகக் கிண்ணத்தை  பெற்றுத்தருவதற்கு அவர் முக்கிய பங்காற்றினார்.  

 21 ஆண்டு காலம்  காற்பந்து விளையாட்டில் கலந்துகொண்ட  காலக்கட்டத்தில் அவர்  1,283 கோல்களை அடித்துள்ளார்.  காற்பந்து விளையாட்டை அழகான கலையாக மாற்றிய  பெலேயின் பெயர்  20 ஆம் நூற்றாண்டில்  காற்பந்து  அடையாளமாகவே மாறியிருந்தது.  

அனைத்துலக ஒலிம்பிக்   குழு   இந்த நூற்றாண்டின் சிறந்த விளையாட்டாளர் என்ற விருதையும், உலக காற்பந்து சம்மேளனமான  ஃபீபா   இந்த நூற்றாண்டின்  காற்பந்து  விளையாட்டாளர்   என்ற விருதையும் அவருக்கு வழங்கியுள்ளன.  பிரேசில் அரசாங்கம்  பெலேயின் மறைவுக்காக மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது.

Pengarang :