SELANGOR

ஜோம் ஷோப்பிங் பற்றுச்சீட்டு 200 வெள்ளியாக அதிகரிப்பு- எஸ்.எம்.யு.இ. பயனாளிகளும் விண்ணப்பிக்கலாம்

ஷா ஆலம், ஜன 17- பெருநாள் கால ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுத்
திட்டத்தின் வழி வழங்கப்படும் உதவித் தொகையின் மதிப்பு 100
வெள்ளியிலிருந்து 200 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் பங்கு பெறுவதற்கான மாதாந்திர குடும்ப வருமான
வரம்பும் 2,000 வெள்ளியிலிருந்து 3,000 வெள்ளியாக
அதிகரிக்கப்பட்டுள்ளதோடு மூத்த குடிமக்கள் நட்புறவுத் திட்ட
(எஸ்.எம்.யு.இ.) பயனளிகளும் இந்த பற்றுச் சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்
என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நோன்புப் பெருநாள், சீனப்புத்தாண்டு மற்றும் தீபாவளியின் போது
வழங்கப்படும் இந்த பெருநாள் கால பற்றுசீட்டு தொடர்பில் மூத்த
குடிமக்களிடமிருந்து மாநில அரசு கருத்துகளைச் சேகரித்தது.

அவர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் பற்றுச்
சீட்டின் மதிப்பு 100 வெள்ளியிலிருந்து 200 வெள்ளியாக
அதிகரிக்கப்பட்டதோடு இத்திட்டத்தில் பங்கேற்பதற்கான வருமான வரம்பும்
3,000 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது என்று அவர் அறிக்கை ஒன்றில்
தெரிவித்தார்.

வாழ்க்கைச் செலவினம் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு மூத்த
குடிமக்கள் நட்புறவுத் திட்ட பயனாளிகளுக்கும் இத்திட்டத்தில் வாய்ப்பு
வழங்கப்படுகிறது என்றார் அவர்.

இந்த திட்டத்தைத் தரம் உயர்த்தும் நடவடிக்கையின் வாயிலாக மக்களின்
சுமையைக் குறைக்க முடியும் என நம்புகிறோம். மேலும், மாநிலத்
திட்டங்களில் யாரும் விடுபடக்கூடாது என்ற அரசின் கொள்கைக்கேற்பவும்
இந்த உதவித் திட்டம் அமைந்துள்ளது என்றார் அவர்.

மொத்தம் ஒரு கோடியே 68 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டிலான இந்த
இந்த திட்டத்தின் வாயிலாக 82,400 பேர் பயன் பெறுவர் என்றும் அவர்
குறிப்பிட்டார்.

பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டம் மற்றும்
எஸ்.எம்.யு.இ. திட்டங்களின் வாயிலாக உதவி பெற்று வருவோர் இந்த
பெருநாள் கால ஷோம் ஷோப்பிங் திட்டத்தில் பங்கேற்க முடியாது என
முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.


Pengarang :