ECONOMY

பலாக்கோங் தொகுதி ஏற்பாட்டில் தொழில்துறை சுற்றுலா ஊக்குவிப்பு விழா- மார்ச் 12ஆம் தேதி நடைபெறும்

காஜாங், பிப் 10- பலாக்கோங் தொகுதி ஏற்பாட்டில் தொழில்துறை கலை, கலாசார விழா வரும் மார்ச் மாதம் 12ஆம் தேதி செராஸ், சி 18 சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.

காலை 9.30 மணி தொடங்கி மாலை 5.00 மணி வரை நடைபெறும் இந்த விழாவில் பொது மக்களை ஈர்க்கக்கூடிய பல்பொருள் விற்பனை அங்காடி மையங்கள், கே-போப் நடனம், சிறார்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டி, ஜூம்பா உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வோங் சியு கீ கூறினார்.

பலாக்கோங்கில் தொழில் துறை சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் விற்பனை மையங்களை திறக்க ஒன்பது தொழிற்சாலைகளும் 60 சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினரும் பதிவு செய்துள்ளன என்றார் அவர்.

கிச்சாப், சமையல் பாத்திரங்கள், ஷாம்பு தயாரிக்கும் நிறுவனங்களும் கைவினைப்  பொருட்கள், ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் உணவுப் பொருட்களை தயாரிக்கும் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினரும் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

தாமான் செராஸ் பிரிமா, அல்-அமின் சூராவில் நேற்று நடைபெற்ற பலாக்கோங் தொகுதி நிலையிலான ஏசான் ராக்யாட் மலிவு விற்பனையை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம்  அவர் இதனைக் கூறினார்.

இந்த தொழில்துறை சுற்றுலா ஊக்குவிப்பு விழாவில் பங்கேற்பாளர்கள், பொது மக்கள் மற்றும் பலாக்கோங் தொகுதி குடியிருப்பாளர்கள் உள்பட 5,000 பேர் பங்கேற்பர் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :