MEDIA STATEMENTNATIONAL

கர்ப்பிணி பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்படக் காரணமான டிரெய்லர் ஓட்டுநருக்கு வெ.10,000 அபராதம்

கிரீக், பிப் 10- கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கருச்சிதைவு ஏற்படும் அளவுக்கு கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய குற்றத்தை ஒப்புக் கொண்ட டிரெய்லர் ஓட்டுநர் ஒருவருக்கு இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 10,000 வெள்ளி அபராதம் விதித்தது.

அலியாஸ் அவாங் (வயது 49) என்ற அந்த ஓட்டுநர் அபராதத் தொகையைச் செலுத்த தவறினால் 12 மாதச் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட் சவிண்டர் சிங் தனது தீர்ப்பில் கூறினார்.

மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவர் வசமுள்ள வாகனம் ஓட்டும் ஆவணங்களில் இந்த தண்டனை குறித்த விபரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

சாலையைப் பயன்படுத்தும் மற்ற வாகனமோட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் கவனக் குறைவாக வாகனத்தை செலுத்தியதாக அலியாஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி காலை 10.50 மணியளவில் கிரீக்-ஜெலி, தீமோர் பாராட் சாலையின் 69வது கிலோ மீட்டரில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்தது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 5,000 முதல் 10,000 வெள்ளி வரையிலான அபராதம் 12 மாதங்களுக்கும் மேற்போகாத சிறைத்தண்டனை மற்றும் தண்டனை விபரங்களை வாகனமோட்டும் ஆவணங்களில் பதிவு செய்யு வகை செய்யும் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 43(1)வது பிரிவின் கீழ அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.


Pengarang :