MEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூர் பாடலைப் புனைந்தவரின் வாரிசுகளுக்கு நோன்புப் பெருநாளுக்கு முன் வீடு வழங்கப்படும்

கோம்பாக், பிப் 26- சிலாங்கூர் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பாடலைப் புனைந்தவரின் வாரிசுகளுக்கு நோன்புப் பெருநாளுக்கு  முன்பாக வீடு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறைந்த சைபுல் பாஹ்ரி இலியாஸ் வாரிசுகளுக்கு பத்து லட்சம் வெள்ளி மதிப்பிலான வீட்டை வழங்குவது தொடர்பில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இதன் தொடர்பான தகவலை நாங்கள் அனுப்பி விட்டோம். வழங்கப்படும் வீடு முழுமையானதாக இருப்பதை உறுதி செய்வதில் சற்று கால தாமதம் ஆகி விட்டது என்று அவர் சொன்னார்.

இந்த வீடு அன்பளிப்பு தொடர்பான பரிந்துரை ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்றல்ல. இது எனது சிந்தையில் உருவானத் திட்டம். இந்த வெகு விரைவில் இதனை நிறைவேற்றுவோம். சைபுலின் வாரிசுகள் தேர்ந்தெடுப்பதற்கு ஏதுவாக ஷா ஆலம் மற்றும் செத்தியா ஆலமில் வீடுகள் அவர்களுக்கு காட்டப்படும் என்றார் அவர்.

நேற்று இங்குள்ள தாமான் மெலாவத்தி பாசார் ரமலான் சந்தைப் பகுதியில் கோம்பாக் மாவட்ட நிலையிலான கித்தா சிலாங்கூர்  பென்யாயாங் திட்டத்தைத் தொடங்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பாடலைப் புனைந்தவர் கௌரவிக்கும் விதமாக அவரின் வாரிசுகளுக்கு பத்து லட்சம் வெள்ளி மதிப்பிலான வீடு வழங்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற  மாநில அளவிலான தேசிய தினக் கொண்டாட்டத்தின் போது மந்திரி புசார் அறிவித்திருந்தார்.

தேசிய கீதம், சிலாங்கூர் மாநிலத்தின் டுலி யாங் மஹா மூலியா எனும் பாடல் மற்றும் மலாக்கா மாநிலப் பாடலை எழுதிய சைபுல் கடந்த 1976ஆம் ஆண்டு தனது 52 வது வயதில் காலமானார்.


Pengarang :