NATIONALSELANGOR

காரின் மேற்கூரையில் துவாரத்தை ஏற்படுத்தி வெடிச்சம்பவம் மீது போலீஸ் விசாரணை

ஷா ஆலம், பிப் 26- காரின் மேற்கூரையில்  துவாரத்தை ஏற்படுத்திய வெடி விபத்து குறித்து ஷா ஆலம் மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இம்மாதம் 17ஆம் தேதி இங்குள்ள பாடாங் ஜாவாவில் நிகழ்ந்த இச்சம்பவத்திற்கு கந்தகத்தை அடிப்படையாக கொண்ட வெடிபொருள் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் கூறினார்.

சம்பவ தினத்தன்று  அதிகாலை 3.50 மணியளவில் அந்த பெரேடுவா மைவி காரின் மேற்கூரையில் தீப்பொறி ஏற்பட்டதை அதன் உரிமையாரின் மனைவி கண்டுள்ளார் என அவர் தெரிவித்தார்.

பொருள் பட்டுவாடா பணியாளராக வேலை செய்யும் அந்த காரின் உரிமையாளர் உடனடியாக வீட்டிலிருந்து வெளியே வந்த காரை சோதிக்க முற்பட்டுள்ளார். எனினும்,அவ்விடத்தில் புகை மூட்டம் சூழந்ததைத் தொடர்ந்து அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார் என்று இக்பால் சொன்னார்.

இந்த வெடிச் சம்பவத்தின் எதிர்ரொலியாக வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மேற்கூரையில் பெரிய துவாரம் ஏற்பட்டு அதிலிருந்த இரும்பு கீழ்நோக்கி வளைந்திருந்தது சோதனையில் கண்டறியப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த தாக்குதலை நடத்தியவர் வெடி குண்டு தொடர்பான விஷயத்தில் நிபுணத்துவம் பெற்றவர் என்பதோடு இத்தாக்குதலுக்கு குறைந்த வெடித்தன்மை கொண்ட கந்தகம் பயன்படுத்தப்பட்டுள்ளது சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகம்  மற்றும் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் தடயவியல் பிரிவுகள் நடத்திய  சோதனையில் தெரியவந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 436வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது வரை 10 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

 


Pengarang :