ECONOMY

நோன்பு மாதத்தை முன்னிட்டு மாபெரும் மலிவு விற்பனை- பி.கே.பி.எஸ். ஏற்பாடு

ஷா ஆலம், மார்ச் 4- ஜெலாஜா ஏசான் ராக்யாட் 2.0 திட்டத்தின் கீழ்  நோன்பு மாதத்தின் போது ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் மிகப்பெரிய அளவிலான அத்தியாவசிய பொருள் மலிவு விற்பனை நடத்தப்படும்.

வாரம் இரு முறை நடத்தப்படும் இந்த விற்பனையில் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனைக்கு வைக்கப்படும் என்று சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.)  தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் முகமது கைரில் முகமது ராஸி கூறினார்.

எனினும், இந்த மலிவு விற்பனையை நடத்துவதற்கான இடம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனக் கூறிய அவர், இந்த விற்பனை சீராக நடைபெறுவதற்கு ஏதுவாக ஆள்பலம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் நன்கு ஆராய்ந்தப் பின்னரே இடங்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

இந்த விற்பனை வார இறுதியில் மட்டும் நடத்தப்பட்டாலும் பொது மக்கள் தங்களுக்குத்  தேவையானப் பொருள்களை எளிதாக பெறுவதற்குரிய ஏற்பாட்டினை பி.கே.பி.எஸ். செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இந்த ஜெலாஜா ஏசான் ராக்யாட் விற்பனையில் கோழி 10 வெள்ளிக்கும் உறைய வைக்கப்பட்ட இறைச்சி ஒரு பாக்கெட் 10 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

இது தவிர, பி.கே.பி.எஸ்.சின் சொந்த வெளியீடுகளான  கோதுமை மாவு, சீனி, மிளகாய் மற்றும் தக்காளிச் சாந்து, கிச்சாப், சாடின், பிஸ்கட், போன்ற பொருள்களும் இந்த விற்பனையில் இடம் பெறும்.


Pengarang :