ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACA

ஜோகூரில் வெள்ளப் பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு- மலாக்காவில் நிலைமை சீரடைகிறது

கோலாலம்பூர், மார்ச் 10- இன்று காலை 8.00 மணி நிலவரப்படி ஜோகூர் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் மலாக்காவில் நிலைமை சீரடைந்து வருகிறது. அதே சமயம், பகாங் மாநிலத்தில் எந்த மாற்றமும் இல்லை.

ஜோகூர் மாநிலத்தில் நேற்று காலை 8.00 மணியளவில் 43,856ஆக இருந்த வெள்ள அகதிகள் எண்ணிக்கை இன்று காலை 8.00 மணிக்கு 45,218ஆக அதிகரித்துள்ளது. இம்மாநிலத்திலுள்ள ஆறு மாவட்டங்களில் உள்ள 174 துயர் துடைப்பு மையங்களில் இவர்கள் தங்கியுள்ளனர்.

ஜோகூரில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டமான பத்து பஹாட்டில் 38,134 பேரும் மூவாரில் 4,057 பேரும் தங்காக்கில் 2,434 பேரும் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இம்மாநிலத்திலுள்ள ஆறு மாவட்டங்களில் இன்று வானம் தெளிவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள வேளையில் மெர்சிங் மற்றும் குளுவாங்கில் மாலையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகாங் மாநிலத்தில் வெள்ள நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை. அம்மாநிலத்திலுள்ள 12 துயர் துடைப்பு மையங்களில் 1,804 பேர் தங்கியுள்ளதாக மாநில சமூக நலத்துறையின் பேரிடர் தகவல் செயலி தெரிவித்தது.

மலாக்கா, ஜாசினில் நேற்றிரவு 126 குடும்பங்களைச் சேர்ந்த 484 பேர் துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்த வேளையில் இன்று காலை அந்த எண்ணிக்கை 117 குடும்பங்களைச் சேர்ந்த 448 பேராக குறைந்தது. இவர்கள் அனைவரும் ஐந்து துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


Pengarang :