ECONOMYNATIONAL

சதுப்பு நிலப்பகுதியில்  முதியவரை முதலைத் தாக்கியது- திரங்கானுவில் சம்பவம்

கோல திரங்கானு, மார்ச் 12- தொழுகைக்கு முன் நீரில் உடம்பைச் சுத்தம் செய்து கொண்டிருந்த முதியவர் ஒருவரை முதலைத் தாக்கியது. இங்குள்ள மானீர், பாடாங் பாப்பான் அருகே உள்ள சதுப்பு நிலப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் 61 வயதான அந்த முதியவர் வலது கையில் காயங்களுக்குள்ளானார்.

மீன் பிடி  தொழிலில் ஈடுபட்டுள்ள சே மான் ஜக்காரியா என்ற அந்த முதியவர்  தினம் இரவு 7.25 மணியளவில் மக்ரிப் தொழுகைக்கு முன்  சதுப்பு நிலப்பகுதியில் உள்ள நீரில் உடம்பை சுத்தம் செய்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

அந்த சதுப்பு நிலப்பகுதியில் மீன் பிடித்தப் பின்னர் தொழுகையை முடித்துக் கொண்டு வீடு திரும்பலாம் என எண்ணி அந்த நீரில் குனிந்த நிலையில் உடலைச் சுத்தம் செய்து கொண்டிருந்த போது சுமார் இரண்டு மீட்டர் நீளம் கொண்ட முதலை திடீரென எதிரே தோன்றி வலது கையைக் கடித்ததாக அவர் தெரிவித்தார்.

இந்த தாக்குதல் காரணமாக நான் சதுப்பு நிலத்தில் விழுந்தேன். நடந்ததை அறியாத என் நண்பர்கள் ஏன் நீரில் விழுந்தாய் என என்னிடம் கேட்டனர். உண்மையில்  நானாக நீரில் விழவில்லை. முதலை கையை கவ்வியதால் விழ நேர்ந்தது என்றார் அவர்.

தன்னைத் தாக்கிய முதலை பின்னர் நீரில் மறைந்து விட்டதாகவும் தன் நண்பர்கள் எங்கு தேடியும் அது தென்படவில்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

கையில் இரத்தம் சொட்டச் சொட்ட மோட்டார் சைக்கிளில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து வீடு வந்து சேர்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.

பின்னர் தன் குடும்பத்தினரின்  உதவியுடன் சுல்தானா நுர் ஜஹிரா மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட தமக்கு கையில் 12 தையல்கள் போடப்பட்டதாக அவர் மேலும்  சொன்னார்.


Pengarang :