ACTIVITIES AND ADSECONOMY

மக்கள் நல அறிமுக நிகழ்வுகளில் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் 1,500 பேர் பங்கேற்பு

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 12- சிலாங்கூர் அரசின் மக்கள் நலத் திட்டங்களை அறிமுகம் செய்யும் ஜெலாஜா கித்தா சிலாங்கூர் பென்யாயாங் திட்டங்களில் நடத்தப்பட்ட இலவச மருத்துவப் பரிசோதனைகளில் இதுவரை 1,500 பேர் வரை பங்கேற்று பயனடைந்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம்  தேதி தொடங்கி மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வுகளில் அந்த எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த சிலாங்கூர் சாரிங் இரண்டாம் கட்ட நிகழ்வுக்கு மக்கள் மத்தியில் சிறப்பான ஆதரவு கிடைத்துள்ளதோடு இது பயன்மிக்க ஏற்பாடு என்பதும் நிரூபணமாகியுள்ளது என்று அவர் சொன்னார்.

மேலும் அதிகமானோர் பயன்பெற வேண்டும் என்பதற்காக இத்திட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம். இத்திட்டத்தில் பங்கு கொள்ள அதிகமானோர் வருகின்றனர். உதாரணத்திற்கு இன்றைய நிகழ்வில் ஷா ஆலம், அம்பாங்கிலிருந்தும் பலர் வந்தனர் என்று அவர் தெரிவித்தார்.

இங்குள்ள கம்போங் மேடான் 2 சமயப் பள்ளியில் இன்று நடைபெற்ற பெட்டாலிங் மாவட்ட நிலையிலான ஜெலாஜா கித்தா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் வர் இதனைக் குறிப்பிட்டார்.

பொது மக்கள் முன்கூட்டியே நோய்களைக் கண்டறிவதற்கு ஏதுவாக சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தை மாநில அரசு கடந்தாண்டு ஏற்பாடு செய்திருந்தது.

கடந்த மே மாதம் முதல் செப்டம்பர் வரை நடைபெற்ற இந்த மருத்துவப் பரிசோதனைத் திட்டத்திற்கு 34 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த திட்டத்தில்  45,000 பேர் பங்கு கொண்டு தங்கள் உடல் நிலையைச் சோதித்தனர். அவர்களில் 4,809 பேர் தொடர் சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டனர்.


Pengarang :