MEDIA STATEMENTNATIONAL

வெளிநாடுகளில் பிறந்த 688 பிள்ளைகளுக்கு குடியுரிமை கோரி உள்துறை அமைச்சிடம் விண்ணப்பம்

கோலாலம்பூர், மார்ச் 23- அந்நிய நாட்டு ஆடவர்களைத் திருமணம் செய்த தன் மூலம் மலேசிய பெண்களுக்கு வெளிநாடுகளில் பிறந்த பிள்ளைகளுக்கு குடியுரிமை கோரி உள்துறை அமைச்சிடம் இதுவரை 688 விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன.

மலேசிய குடியுரிமை கோரி இதுவரை செய்யப்பட்டுள்ள 150,000 ஒட்டு மொத்த விண்ணப்பங்களில் ஒரு பகுதி இதுவாகும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் எனக் கருதுகிறோம். ஆனால், அவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இன்னும் வரவில்லை. வெளிநாடுகளில் பிறந்த குழந்தைகளுக்கு 15(2) வது ஷரத்தின் கீழ் இந்த விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.

நாங்கள் இத்தகைய விண்ணப்பங்களை பகுதி வாரியாக பிரித்துள்ளோம். அந்த 150,000 விண்ணப்பங்களில் குடியுரிமைத் தகுதி இல்லாத அல்லது திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவின் மூலம் பிறந்த குழந்தைகள் சம்பந்தப்பட்டவையே அதிகமாக உள்ளன என்று மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது அவர் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை கோரி மலேசியப் பெண்கள் செய்துள்ள விண்ணப்பத்தின் எண்ணிக்கை குறித்து தும்பாட் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் டத்தோ மும்தாஸ் முகமது நாவி கேள்வியெழுப்பியிருந்தார்.


Pengarang :