MEDIA STATEMENTSELANGOR

மாநிலத்தில் பழுதானச் சாலைகளைச் சீரமைக்கும் பணிக்கு 5 கோடி வெள்ளி ஒதுக்கீடு

ஷா ஆலம், ஏப் 1- சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பழுதானச் சாலைகளைச் புனரமைப்பதற்கு சிலாங்கூர் மாநில அரசு ஐந்து கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளது. சாலைச் சீரமைப்புப் பணிகள் இம்மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊராட்சி மன்றங்களிடமிருந்து பழுதடைந்த சாலைகளின் பட்டியலைப் பெறுவதற்கு தாங்கள் காத்திருப்பதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

அந்த பட்டியல் கிடைத்தவுடன் எந்தச் சாலையை முதலில் சீரமைப்பது என்பது குறித்து முடிவெடுப்போம். நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் சாலைச் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்த ஐந்து கோடி வெள்ளி மாநிலம் முழுவதும் உள்ள பழுதடைந்த மற்றும் பிரச்சினைக்குரிய சாலைகளைச் சீரமைப்பதற்காக பயன்படுத்தப்படுமே தவிர இந்நிதியைக் கொண்டு புதிய சாலைகள் நிர்மாணிக்கப்படாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

பொது மக்களின் வசதிக்காக மாநிலத்திலுள்ள சாலைகளை தரம் உயர்த்துவதற்காக இவ்வாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 14 கோடியே 50 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டது.

அந்த நிதியில் 4 கோடியே 9 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளி புதிய சாலைகளை அமைப்பதற்காக பொதுப்பணி இலாகாவிடம் ஒப்படைக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியிருந்தார்.


Pengarang :