ECONOMYSELANGOR

தேர்தலில் வாக்களிப்பீர், பிரசாரத்தில் சமயத்தைப் பயன்படுத்த வேண்டாம்- சிலாங்கூர் சுல்தான் வேண்டுகோள்

சபாக் பெர்ணம், ஏப் 15- இவ்வாண்டு ஜூன் அல்லது ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்லில் மறவாமல் வாக்களிக்கும்படி மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் மாநில மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

நேர்மையான, பொறுப்புணர்வுமிக்க மற்றும் ஊழலில் ஈடுபடாத தலைவர்களைத் தேர்தெடுப்பதற்கு ஏதுவாக மக்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை முறையாக ஆற்ற வேண்டும் என்று சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் வலியுறுத்தினார்.

தேர்தல் பிரசாரத்தின் போது அனைத்து தரப்பினரும் விவேகத்துடன் செயல்படும் அதேவேளையில் அதிகாரிகள் நிர்ணயித்துள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்றியும் நடக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

பிரசாரத்தின் போது அவதூறு பரப்புவது, பொய்யுரைப்பது, சில தரப்பினருக்கு அல்லது அரசாங்கத்திற்கு எதிராக வெறுப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது போன்றச் செயல்களை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இங்குள்ள சுங்கை ஆயர் தாவாரில் பாரிட் பாரு அல்-மாஹ்ருபியா பள்ளிவாசல் திறப்பு விழாவிக்கு தலைமை தாங்கி உரை நிகழ்த்திய போது சுல்தான் இவ்வாறு கூறினார்.

அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலின் போது உயர்நெறியுடனும் சட்டத்திற்கு உட்பட்டும் பிரசாரம் செய்யும் அதே வேளையில் கட்சி சார்ந்த அரசியல் நோக்கத்திற்காக சமயத்தை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் நினைவுறுத்தினார்.

பிரசார நடவடிக்கைகளை விவேகத்துடன் மேற்கொள்ளும் பட்சத்தில் அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை கொள்வதற்கும் சிலாங்கூர் மாநில மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தக்கூடிய பொறுப்புமிக்க அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கும் வாய்ப்பு கிட்டும் என்றார் அவர்


Pengarang :