ECONOMYSELANGOR

ஒற்றுமையை வலுப்படுத்தி ஒருவரை ஒருவர் மதித்து நடப்பீர்- சுல்தான் வேண்டுகோள்

சபாக் பெர்ணம், ஏப் 15- நாடு தொடர்ந்து அமைதியுடனும் வளப்பத்துடனும் இருப்பதற்கு ஏதுவாக  மக்கள் ஒற்றுமையை வலுப்படுத்தும் அதேவேளையில் ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டுமாய் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டில் மேம்பாட்டுப் பணிகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய மக்களுக்கிடையிலான ஒற்றுமை மிக அவசியம் என்று சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா கூறினார்.

நாடு தொடர்ந்து அமைதியுடனும் வளப்பத்துடனும் இருப்பதற்கும் மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை சீராக மேற்கொள்வதற்கும் ஏதுவாக ஒற்றுமையை வலுப்படுத்தி ஒருவரை ஒருவர் மதித்து நடக்கும்படி நாட்டின் மக்களை குறிப்பாக பல இன, சமயங்களைக் கொண்ட சிலாங்கூர் மக்களை கேட்டுக் கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டார்.

முஸ்லீம்கள் குறிப்பாக மலாய்க்காரர்கள் குடும்பத்தினருடனும் சக சமயத்தினருடனும் நட்புறவைப் பேணிக்காக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

நாட்டின் மேம்பாட்டுப் பலனை அனுபவிப்பதற்கு ஏதுவாக மலய்க்காரர்கள் ஒன்றுபட்டு செயல்படுபவர்களாகவும் உத்வேகம் கொண்டவர்களாகவும் இருப்பது அவசியம் என்று அவர் இங்குள்ள பாரிட் பாரு அல்-மாஹ்ருபியா பள்ளிவாசலை திறப்பு விழாவில் உரையாற்றிய போது சொன்னார்.

முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும் வேகத்தில் நமது இனத்திற்கே உரித்தான உயரிய நெறிகளை புறக்கணித்து விடக்கூடாது என்றும் அவர் நினைவுறுத்தினார்


Pengarang :