ECONOMYSELANGOR

ஷா ஆலமில் மாபெரும் மலிவு விற்பனை- ஒரு மணி நேரத்தில் கோழி, இறைச்சி விற்றுத் தீர்ந்தன

ஷா ஆலம், ஏப் 15- நோன்புப் பெருநாளை முன்னிட்ட இங்குள்ள செக்சன் 24இல் இன்று நடைபெற்ற மாநில அரசின் மாபெரும் மலிவு விற்பனையின் போது ஒரு மணிக்கும் குறைவான நேரத்தில் அத்தியாவசியப் பொருள்கள் விற்றுத் தீர்ந்தன.

கோழி, முட்டை மற்றும் இறைச்சிக்கு பொது மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்பட்டதாக கோப்ராசி வர்கா ஹிஜ்ரா சிலாங்கூர் பெர்ஹாட் (கோஹிஜ்ரா) தலைமை நிர்வாகி முகமது சுக்ரி இஸ்மாயில் கூறினார்.

இந்த விற்பனையில் கோழிக்கு பெரும் வரவேற்பு இருந்தது. ஓரு மணிக்கும் குறைவான நேரத்தில் 200 கோழிகள் விற்றுத் தீர்ந்தன. அதே போல் முட்டை மற்றும் இறைச்சிக்கும் நல்ல வரவேற்பு இருந்தது. நோன்புப் பெருநாளுக்காக இப்பொருள்களை வாங்குவதாக பொது மக்கள் கூறினர் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ஒரு கிலோ சீனியையும் கோஹிஜ்ரா இங்கு விற்பனைக்கு வைத்தது. சமையல் பொருள்களை பொது மக்கள் ஒரே இடத்தில் வாங்குவதற்கு ஏதுவாக இப்பொருள்கள் தருவிக்கப்பட்டன என்றார் அவர்.

இங்குள்ள செக்சன் 24 மக்கள் குடியிருப்பு திட்ட அடுக்குமாடி வீட்டுப் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மலிவு விற்பனையில் கலந்து கொள்ள பொது மக்கள் காலை 7.00 மணி முதல் வரிசையில் காத்திருக்கத் தொடங்கியதாக அவர் சொன்னார்.

காலை 9.45 மணிக்கு வியாபாரம் தொடங்கிய போதும் பொது மக்கள் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்களில் காலை முதல் பொறுமையாக காத்திருந்தனர என்று அவர் மேலும் கூறினார்.

இந்த விற்பனையில் நாங்கள் 200 பேருக்கு தேவையான பொருள்களை மட்டுமே விற்பனைக்கு வைத்திருந்தோம். இருந்த போதிலும் விற்பனையாகாத பொருள்களை வாங்குவதற்காக அவர்கள் இந்த விற்பனை இயக்கம் முடியும் வரை பொறுமையுடன் காத்திருந்தனர் என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :