ANTARABANGSASELANGOR

சூடான் நெருக்கடி- மீட்கப்பட்ட 30 மலேசியர்கள் இன்று தாயகம் திரும்புவர்

புத்ராஜெயா, ஏப் 28- உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ள சூடான் நாட்டின் தலைநகரான கார்ட்டூமில் சிக்கியிருந்த 30 மலேசியர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ள வேளையில் அவர்கள் அனைவரும் இன்று தாயகம் திரும்பவுள்ளனர்.

மீட்கப்பட்டவர்களில் விஸ்மா புத்ரா அதிகாரிகள், பெட்ரோனாஸ் பணியாளர்கள் மற்றும் மாணவர்களும் அடங்குவர் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ரி அப்துல் காடீர் கூறினார்.

சவூதி அரேபிய போர்க் கப்பலில் சூடான் துறைமுகத்திலிருந்து ஒன்பது மணி நேரப் பயணத்திற்குப் பின்னர் ராஜா பைசால் கடற்படைத் தளத்திற்கு மலேசிய நேரப்படி நேற்று விடியற்காலை 1.54 மணியளவில் வந்தடைந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 194 பேரில் இந்த 30 மலேசியர்களும் அடங்குவர் என்று அவர் தெரிவித்தார்.

ஜெட்டாவிலிருந்து சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் பயணமாகும்  அந்த மலேசியர்கள் இன்று மாலை 3.55 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் பூங்கா ராயா முனையம் வந்தடைவர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த விமானத்தில் மலேசியர்களோடு நமது உதவியால் சூடானிலிருந்து வெளியேறிய இதர நாடுகளைச் சேர்ந்த 22 பேரும் உள்ளனர். அவர்களில் 14 சிங்கப்பூரியர்கள், ஆறு கம்போடியர்கள், இரு அமெரிக்கர்களும் அடங்குவர் என்றார் அவர்.

சூடான் ஆயுதப்படைக்கும் துணை இராணுவப் படையினருக்கும் இடையே கடந்த 15ஆம் தேதி முதல் நிகழ்ந்து வரும் மோதலில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு 3,500 பேர் வரை காயமடைந்துள்ளனர்.


Pengarang :