ECONOMYMEDIA STATEMENT

வெ.18 லட்சம் மதிப்புள்ள தங்கம் கொள்ளை- சந்தேக நபர் கைது

சிரம்பான், மே 4- கோல பிலாவிலுள்ள நகைக்கடை ஒன்றின் பின்புறம் நேற்று நிகழ்ந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் உள்ளுர் ஆடவர் ஒருவரை போலீசார் விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளனர்.

ஐம்பது வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர் நேற்றிரவு 10.00 மணியளவில் கோல பிலாவில் கைது செய்யப்பட்ட்டதாக கோல பிலா மாவட்ட போலீஸ் தலைவர் டி.எஸ்.பி. ஷியாருள் அனுவார் அப்துல் வஹாப் கூறினார்.

கைதான நபர் விசாரணைக்காக வரும் மே 10 தேதி வரை ஒரு வார காலத்திற்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள வேளையில் மற்றொரு சந்தேகப் பேர்வழி மற்றும் இச்சம்பவத்தில் தொடர்புடைய இதர நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் தாங்கள ஈடுபட்டு வருவதாக அவர் சொன்னார்.

இந்த கொள்ளைச் சம்பவம் சில தினங்களுக்கு முன்னரே திட்டமிட்டப் பட்டிருக்கக்கூடும் என நாங்கள் சந்தேகிக்கிறோம். அந்த நகை கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பார்க்கையில் இத்திட்டத்தை நிறைவேற்ற அவர்கள் நன்கு திட்டமிட்டது தெரியவருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

ஆகவே, அந்த கோணத்திலிருந்து விசாரணையை நாங்கள் தொடக்கியுள்ளோம். இதன் தொடர்பில் மேலும் சிலரை கைது செய்யவிருக்கிறோம் என்று இன்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 395 மற்றும் 397 பிரிவுகளின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மேலும் சொன்னார்.

நேற்று காலை 11.00 மணியளவில் நிகழ்ந்த இந்த கொள்ளைச் சம்பவத்தில் நகை விநியோகிப்பாளர்கள் இருவர் 18 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 7 கிலோ தங்கத்தை முகமூடி அணிந்த இரு கொள்ளையர்களிடம் பறிகொடுத்தனர்.


Pengarang :