ANTARABANGSAECONOMY

விவசாயத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த மலேசியா-தென் கொரியா நடவடிக்கை

புத்ராஜெயா, மே 13- நீடித்த உணவு உற்பத்தியை உறுதி செய்வதற்காக விவசாயம் சார்ந்த வர்த்தக துறைகளில் மலேசியாவும் தென் கொரியாவும் ஒத்துழைப்பை வலுப்படுத்தவுள்ளன.

இந்த ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு அடையாளமாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாயம் மற்றும் உணவு உத்தரவாதத் துறை அமைச்சு கூறியது.

கிழக்கை நோக்கும் கொள்கை அமலாக்கம் கண்டு 40 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டியும் இந்த ஒப்பந்தம் காணப்படுகிறது என்று அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவித்தது.

விவசாயத் துறையில் நிலவும் சவால்களை எதிர்கொள்வதற்கு ஏதுவாக அறிவாற்றல், அனுபவம், நற்பண்புகள் மற்றும் வர்த்தக வாய்ப்புகளை பகிர்ந்து கொள்வதற்கும் உணவு உத்தரவாதம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்நுட்ப சார்ந்த துறைகளில் ஒன்றுபட்டு செயல்படுவதற்கும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது என்று அது குறிப்பிட்டது.

மலேசியா வந்துள்ள தென் கொரிய விவசாயம், உணவு மற்றும் புறநகர் விவகாரத் துறை அமைச்சர் சுங் ஹூவாங் கியேனை விவசாயம் மற்றும் உணவு உத்தரவாதத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு நேற்று தமது அலுவலகத்தில் சந்தித்தார். இவ்விரு தலைவர்கள் நடத்தும் முதல் சந்திப்பாக இது விளங்குகிறது.

விவசாயம் சார்ந்த வர்த்தகத் துறைகளில் தீவிரமாக பங்கேற்று வரும் மலேசியாவின் வர்த்தக பங்காளியாக அந்த கொரிய குடியரசு விளங்குவதாக அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டது.


Pengarang :