SELANGOR

அதிக மக்கள் பயன்பெறும் வகையில் மலிவு விற்பனை தரம் உயர்த்தப்படும்- மந்திரி புசார்

ஷா ஆலம், மே 16- ஜெலாஜா ஏசான் ராக்யாட் எனும் அத்தியாவசியப்
பொருள் மலிவு விற்பனையைச் சில சீரமைப்புகளுடன் தொடர்ந்து நடத்த
மாநில அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு அமல்படுத்தியுள்ள
ஜூவாலான் ரஹ்மா எனும் மலிவு விற்பனைத் திட்டத்துடன் மாநில
அரசின் மலிவு விற்பனையை ஒருங்கிணைப்பதும் அந்நடவடிக்கைகளில்
அடங்கும்.

இந்த நடவடிக்கையின் மூலம் மாநிலம் முழுவதும் நடத்தப்படும் மலிவு
விற்பனைத் திட்டங்களில் விற்பனைக்கு வைக்கப்படும் பொருள்களின்
எண்ணிக்கையும் அளவும் அதிகரிப்பதற்கும் இதன் மூலம் மக்கள் கூடுதல்
பலன் பெறுவதற்கும் வாய்ப்பு கிட்டும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கூறினார்.

நாம் மலிவு விற்பனையைத் தொடரவிருக்கிறோம். உள்நாட்டு வர்த்தக
மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் ஜூவாலான் ஏசான் ரஹ்மா
விற்பனைத் திட்டத்துடன் மாநில அரசின் விற்பனையை இணைக்கும்
போது இது மேலும் சிறப்பு பெரும் என்று அவர் தெரிவித்தார்.

‘இதன் மூலம் பொருள்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.
அதிகம் சிக்கனப்படுத்தவும் இயலும். மாநில மக்களுக்குக் கூடுதல் பலனும்
கிட்டும். இத்திட்டம் தொடர்பில் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தையைப்
பொறுத்து இத்திட்டம் அடுத்த மாதவாக்கில் அமல்படுத்தப்படும் என்றார்
அவர்.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் ஜெலாஜா ஏசான்
ராக்யாட் திட்டத்திற்கு மலேசியச் சாதனைப் புத்தகத்தின் அங்கீகாரம்
வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைத் தெரிவித்தார்.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை இந்த
மலிவு விற்பனைத் திட்டத்தின் மூலம் 25 லட்சம் பேர்
பயனடைந்துள்ளனர். இந்த திட்டத்தின் அமலாக்கத்திற்காக மாநில அரசு 3
கோடியே 70 லட்சம் வெள்ளியைச் செலவிட்டுள்ளது.


Pengarang :