ALAM SEKITAR & CUACAECONOMY

புயல் காற்றில் பாதிக்கப்பட்ட பள்ளிகளைச் சீரமைக்க அவசர நிதி- கல்வியமைச்சு விரைந்து வழங்கும்

புத்ராஜெயா, மே 21- இரு தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட கடும் புயலின் விளைவாக கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் சேதமடைந்த 36 பள்ளிகளை சீர் செய்ய கல்வி அமைச்சு அவசரகால நிதியை உடனடியாக ஒதுக்கீடு  செய்துள்ளது.

இந்த ஒதுக்கீடு கோலாலம்பூர் கூட்டரசு பிரதேச கல்வித் துறைக்கும் சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறைக்கும்  அனுப்பப்படும் என்று கல்வியமைச்சு இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வீசிய கடும் புயல் காற்றில்  கோலாலம்பூரில் 27 பள்ளிகளுக்கும் சிலாங்கூரில் 9 பள்ளிகளுக்கும் சேதம் ஏற்பட்டது.

கூட்டரசு பிரதேச கல்வி இலாகா, சிலாங்கூர் கல்வி இலாகா மற்றும் மாவட்ட கல்வி அலுவலகம் ஆகியவை  பொதுப்பணித் துறையின்  ஒத்துழைப்போடு பள்ளிகளில் ஏற்பட்ட சேதங்களை மேலும் மதிப்பீடு செய்யும் என்று கல்வியமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

அதன் பின்னர் இதன் தொடர்பான  மதிப்பீட்டு அறிக்கை மற்றும் செலவு மதிப்பீட்டு அறிக்கையை பொதுப்பணித் துறை கல்வியமைச்சிடம்  சமர்ப்பிக்கும். இதனைத் தொடர்ந்து  அவசர கால சேதங்களை சரிசெய்யும் நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி மாநில கல்வித் துறைகளுக்கு  கூடிய விரைவில் விநியோகிக்கப்படும் என்று அது கூறியது.

மாணவர்களின்  கற்பித்தல் மற்றும் கற்றல் நடவடிக்கைகள்   எந்த தடங்கலும் இல்லாமல் தொடர்வதற்கு ஏதுவாக பள்ளிகளை  சீரமைப்பு செய்யும் பணிகள் விரைந்து  மேற்கொள்ளப்படும் என்று அமைச்சு உறுதியளித்தது.

Pengarang :