SELANGOR

சுங்கை பீலேக், மோரிப் தொகுதிகளில் வார இறுதியில் இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கம்

ஷா ஆலம், ஜூன் 6- நோய்க்கான அறிகுறியை முன்கூட்டியே கண்டறிந்து
உரிய சிகிச்சைப் பெற உதவும் இரண்டாம் கட்ட சிலாங்கூர் சாரிங் இலவச
மருத்துவப் பரிசோதனை இயக்கம் சுங்கை பீலேக் மற்றும் மோரிப்
தொகுதிகளில் வார இறுதியில் நடைபெறவுள்ளது.

காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறவிருக்கும்
இந்த மருத்துவ முகாமில் பங்கேற்று பயனடையுமாறு வட்டார மக்களைப்
பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி
மரியா மாமுட் கேட்டுக் கொண்டார்.

சுங்கை பீலேக் மற்றும் மோரிப் தொகுதி மக்களுக்கு ஓர் நற்செய்தி.
மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்வதற்குரிய வாய்ப்பினை
பெறாதவர்களுக்கு உதவும் நோக்கில் சிலாங்கூர் சாரிங் இயக்கம் உங்களை
நாடி வருகிறது. இந்த வாய்ப்பினை நழுவ விடாதீர்கள் என அவர் தனது
பேஸ்புக் பதிவில் கேட்டுக் கொண்டார்.

இந்த இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கத்தில் வழக்கமான இரத்த
மற்றும் சிறுநீர் சோதனைகளோடு புற்று நோய், கண், காது, பல் மற்றும்
பிஸியோதெராபி சோதனைகளும் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

சுங்கை பீலேக் தொகுதி நிலையிலான மருத்துவப் பரிசோதனை இயக்கம்
வரும் ஜூன் 10ஆம் தேதி பந்தாய் சிப்பாங் புத்ரா சமூக மண்டபத்திலும்
மோரிப் தொகுதி நிலையிலான பரிசோதனை இயக்கம் ஜூன் 11ஆம் தேதி
கோல லங்காட், பந்திங் எம்.பி.கே.எல். விளையாட்டு தொகுதி
மண்டபத்திலும் நடைபெறும்.

இந்த இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கம் தொடர்பில் மேல்
விபரங்களைப் பெற விரும்புவோர் 1-800-22-6600 என்ற எண்களில் அல்லது
https://selangorsaring.selangkah.my/ எனும் அகப்பக்கம் வாயிலாகத் தொடர்பு
கொள்ளலாம்.


Pengarang :