SELANGOR

தாமான் ஸ்ரீ மூடாவில் வெள்ளத் தடுப்புத் திட்டம்- ஷா ஆலம் கவுன்சிலர்கள் பாப்பாராய்டு, ராமு ஆய்வு

ஷா ஆலம், ஜூன் 6- இங்குள்ள செக்‌ஷன் 25, தாமான் ஸ்ரீ மூடாவில்
மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளின் மேம்பாடு
குறித்து ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர்களான வீ.பாப்பாராய்டு
மற்றும் ராமு நடராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ஜாலான் சக்சாமா 25/32 மற்றும் ஜாலான் ஹிக்மாட் 25/35 ஆகிய
பகுதிகளில் கால்வாய் அமைப்பு மற்றும் பம்ப் ஹவுஸ் எனப்படும் நீர்
இறைப்பு நிலைய நிர்மாணிப்பு உள்ளிட்ட பணிகள் இந்த வெள்ளத் தடுப்புத்
திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு
உறுப்பினருமான வீ.கணபதிராவ் சார்பில் மேற்கொண்ட வருகையின்
போது மேம்பாட்டுப் பணிகளின் சமீபத்திய நிலவரங்கள் குறித்து ஷா
ஆலம் மாநகர் மன்ற அதிகாரி ஃபாட்லி மற்றும் குத்தகையாளரிடமிருந்து
தாம் விளக்கங்களைப் பெற்றதாக பாப்பா ராய்டு கூறினார்.

ஆண்டு இறுதியில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் பருவமழையை
எதிர்கொள்வதற்கு ஏதுவாக இந்த திட்டத்தை வரும் ஆகஸ்டு
மாதத்திற்குள் பூர்த்தி செய்ய மாநகர் மன்றம் இலக்கு
நிர்ணயித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தாமான் ஸ்ரீ மூடா எதிர்நோக்கும் வெள்ளப் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு
காண்பதில் மிகுந்த அக்கறை காட்டி வரும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி மற்றும் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வீ.
கணபதிராவ் ஆகியோருக்குத் தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாக
அவர் சொன்னார்.

இந்த வெள்ளத் தடுப்புத் திட்ட அமலாக்கம் விரைவாக
மேற்காள்ளப்படுவதை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுத்து வரும்
ஷா ஆலம் டத்தோ பண்டார் டாக்டர் நோர் புவாட் மற்றும் மாநகர் மன்றத்தின் பொறியியல் துறைக்கும் தங்களின் நன்றியைப் புலப்படுத்திக்
கொள்வதாக ஸ்ரீ மூடா பகுதிக்கான கவுன்சிலர் ராமு குறிப்பிட்டார்.


Pengarang :