SELANGOR

செந்தோசா தொகுதியில் மலிவு விற்பனை- மழைக்கு மத்தியிலும் 450 பேர் திரண்டனர்

கிள்ளான், ஜூன் 6- செந்தோசா தொகுதி நிலையிலான ஜெலாஜா ஏசான்
ரஹ்மா விற்பனை இன்று இங்குள்ள தாமான் டேசாவானில் நடைபெற்றது.

காலை 8.00 மணி தொடங்கி பெய்த கடும் மழையையும்
பொருட்படுத்தாமல் 450க்கும் மேற்பட்டோர் இந்த விற்பனையில் கலந்து
தங்களுக்கு தேவையானப் பொருள்களை வாங்கிச் சென்றனர்.

பொது மக்களின் வசதிக்காக தொகுதி பொறுப்பாளர்கள் விற்பனை
நடைபெறும் இடத்தில் கூடுதலாகத் தற்காலிகக் கூடாரங்களை அமைத்து
தந்ததாக சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின்
(பி.கே.பி.எஸ்.) பொறியியல் நிர்வாகி முகமது ரிட்சுவான் அஸ்மி கூறினார்.

இங்கு மலிவு விற்பனை சீராக நடைபெற்றது. காலை 8.30 மணி முதல்
பொது மக்கள் வரத் தொடங்கியதும் தொகுதி பொறுப்பாளர்கள் கூடுதல்
கூடாங்களை அமைத்து உரிய வசதிகளை ஏற்படுத்தித் தந்தனர் என்று
அவர் குறிப்பிட்டார்.

பி.கே.பி.எஸ்., சட்டமன்றத் தொகுதி மற்றும் மக்கள் பிரதிநிதி ஆகிய
தரப்பினருக்கிடையிலான ஒத்துழைப்பு மிகவும் சிறப்பானதாக உள்ளது.
இந்த திட்டத்தின் வெற்றியை உறுதி செய்ய அனைத்துத் தரப்பினரும்
தங்களின் பணியை செவ்வனே ஆற்றுகின்றனர் என்றார் அவர்.

காலை 11.30 மணியளவில் 500க்கும் மேற்பட்ட கோழிகளும் 300 தட்டு
முட்டைகளும் விற்கப்பட்டு விட்டதாக கூறிய அவர், அனைத்து
பொருள்களும் முழுமையாக விற்றுத் தீர்ந்து விட்டதால் இந்த விற்பனை
நிர்ணயித்ததை விட ஒரு மணி நேரம் முன்னதாக முடிவுக்கு வந்தது
என்றார்.

இந்த மலிவு விற்பனை வரும் செப்டம்பர் மாதம் வரை தொடரும். பொது
மக்கள் வழங்கிய ஆலோசனையின் பேரில் இந்த விற்பனை இயக்கத்தில்
சில மாற்றங்களும் சீரமைப்புகளும் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

விற்பனைக்கு வைக்கப்படும் பொருள்களின் எண்ணிக்கை அல்லது
விற்பனை இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பு
பி.கே.பி.எஸ். அகப்பக்கம் அல்லது சமூக ஊடகங்கள் வாயிலாக
வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :