MEDIA STATEMENTPENDIDIKAN

மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மாணவர் விடுதிக்கு மாநில அரசு 300,000 ரிங்கிட் மானியம்- மந்திரி புசாருக்கு குணராஜ் நன்றி

ஷா ஆலம், ஜூலை 8- மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மாணவர் விடுதியை நிர்வகிப்பதற்கு முதல் கட்டமாக மூன்று லட்சம் வெள்ளியை மானியமாக வழங்கிய மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு செந்தோசா சட்டமன்றத் தொகுதியின் நடப்பு பிரதிநிதியான டாக்டர் குணராஜ் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இந்த நிதியின் மூலம் நீண்டகாலத் தாமதத்திற்குப் பின் விடுதி விரைவில் செயல்படுவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளதாக இந்திய சமூகத்திற்கான மந்திரி புசாரின் சிறப்பு பிரதிநிதியுமான அவர் சொன்னார்.

இந்த நிதி இவ்வாண்டிற்கான ஒதுக்கீடாகும் எனக் கூறிய குணராஜ், மிட்லண்ட்ஸ் பள்ளி மேலாளர் வாரியத்துடன் இணைந்து தொடர்ச்சியாக தாங்கள் மேற்கொண்ட முயற்சியின் வாயிலாக இந்த நிதி கிடைக்கப்பெற்றது என்றார்.

மொத்தம் 200 மாணவர்கள் தங்கும் வசதி கொண்ட இந்த விடுதியில் தொடக்க  கட்டமாக மாணவர்களை சேர்க்கவுள்ளோம். இம்மாணவர்கள் இந்த விடுதியில் தங்கி மிட்லண்ட்ஸ் தமிழப்பள்ளியில் கல்வியைத் தொடர்வர்.  

இந்த விடுதியில் தங்குவதற்கு தகுதி உள்ள அதாவது குறைந்த வருமானம் பெறும்  B 40 தரப்பு மாணவர்களை அடையாளம் காணும் பணியில் சிலாங்கூர் மாநில தலைமையாசிரியர் மன்றத்துடன் இணைந்து பள்ளி மேலாளர் வாரியம் ஈடுபடும் எனவும் அவர் சொன்னார்.

இதனிடையே, இந்த தங்கும் விடுதி தொடக்கக் கட்டமாக 25 மாணவர்களுடன் செயல்படத் தொடங்கும் என்று பள்ளி  மேலாளர் வாரியத் தலைவர் கே.உதயசூரியன் கூறினார். 

இருபத்தைந்து மாணவர்களுக்கு ஓராண்டு காலத்திற்கு தங்கும் வசதி, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு இந்த நிதி போதுமானதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார். 

மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மாணவர் தங்கும் விடுதியை நிர்வகிப்பதற்கு மூன்று லட்சம் வெள்ளி வழங்கப்படும் தகவலை நேற்று இங்குள்ள எம்.பி.எஸ்.ஏ. மாநாட்டு மையத்தில் நடைபெற்ற பள்ளிகளுக்கு மானியம் வழங்கும் நிகழ்வின் போது மந்திரி புசார் வெளியிட்டார்.

சுமார் 40 லட்சம் வெள்ளி செலவிலான இந்த தங்கும் விடுதியின் கட்டுமானப் பணி  கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கி  அக்டோபர் மாதம் முற்றுப் பெற்றது.

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் மற்றும் நிர்வாக நடைமுறைச் சிக்கல் காரணமாக இந்த விடுதி செயல்படுவதில் தாமதம் ஏற்பட்டது.


Pengarang :