MEDIA STATEMENTNATIONAL

அனல் பறக்கும் உரையுடன் மக்கள் வெள்ளத்தில்  ஒற்றுமை அரசின் தேர்தல் இயந்திரம் வெள்ளோட்டம்.

கட்டுரை சு. சுப்பையா

பாங்கி.ஜூலை.7-  ஆறு மாநிலத் தேர்தலுக்கான பிரச்சாரம் கடும் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள், வெள்ளம் போல் பாங்கி வணிக மையத்தில் அணி திரண்டனர். நம்பிக்கை கூட்டணியும் தேசிய முன்னணியும் ஒன்று இணைந்து சிலாங்கூர் மாநிலத்தை மீண்டும் தக்க வைத்துக் கொள்ளக் களத்தில் குதித்துள்ளன. இதன் தேர்தல் இயந்திரம் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  தலைமையில்  பிரமாண்டமாக  தேர்தல் இயந்திரம்  நேற்று  வெள்ளோட்டம் கண்டது.

இந்த வரலாற்று பூர்வ நிகழ்ச்சியில் ஒற்றுமை அரசாங்கத்தின் முன்னணித் தலைவர்களான பிரதமரும் நம்பிக்கை கூட்டணியின் தலைவருமான டத்தோ ஸ்ரீ அன்வார், துணைப் பிரதமரும் தேசிய முன்னணியின் தலைவருமான டத்தோ ஸ்ரீ ஜஹிட் ஹமிடி, தற்காப்பு துறை அமைச்சரும் அம்னோ மற்றும் தேசிய முன்னணி கூட்டணியின் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ மாட் ஹசான் தகவல் தொழில் நுட்ப அமைச்சர் சப்ரி செக், விவசாய அமைச்சரரும் அமனா கட்சியின்  தேசியத் துணைத் தலைவருமான சலாயுடின் அயோப், சட்டத் துறை அமைச்சர், வெளியுறவு துறை அமைச்சர், சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, சிலாங்கூர் மாநில அம்னோத் தலைவர் டத்தோ வீர மெகட் சுல்கர்னையின், ஜ.செ.க.வின் சிலாங்கூர் மாநிலத் தலைவரும் , அரசியல் வட்டாரத்தில் நீதி மன்றத்திலும் கடந்த 40 ஆண்டுகளாகக் கர்ஜிக்கும் சிங்கமாக வலம் வந்த கர்ப்பால் சிங்கின் புதல்வருமான கோபிந் சிங் டியோ, சரவாக் மாநில முன்னணித் தலைவர்கள், சிலாங்கூர் மாநிலத்தில் சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினர்கள், நம்பிக்கை கூட்டணி தலைவர்கள், தேசிய முன்னணித் தலைவர்கள் என மா பெரும் தலைவர்கள் பட்டாளம் பாங்கியில் ஒன்று இணைந்து சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் மா பெரும் வெற்றியை ஈட்ட வேண்டும் என்ற தீவிர வேட்கையோடு ஒற்றுமைத் தேர்தல் இயந்திரம் மாபெரும் வெள்ளோட்டம் தொடங்கியது.

அம்னோ மற்றும் பி.கே.ஆர் கட்சிகளில்  இருந்த பழைய துரோகிகளிடமிருந்து சிலாங்கூரை  காக்க வேண்டும். இந்தத் துரோகிகள் பட்டாளத்தின் முன்னணித் தலைவர்களாக இருக்கும் டத்தோ ஸ்ரீ அஸ்மின் அலி, தான் ஸ்ரீ நோ ஒமார் ஆகியோரைச் சிலாங்கூர் மாநில அரசியல் களத்திலிருந்து விரட்டியடிக்க வேண்டும் என்ற தீவிர வேட்கையில் இருப்பதை நேற்றைய அரசியல் பிரச்சார உரைகள் மெய்ப்பித்தன.

நாட்டில் மிகப் பெரிய அரசியல் கூட்டணிகளான நம்பிக்கை கூட்டணியும் தேசிய முன்னணியும் முதல் முறையாக ஒன்று இணைந்து ஒற்றுமையாக 6 மாநிலத் தேர்தலையும் இம்முறை களம் காண்கிறது. இதில்  அம்னோ மீண்டும் புதிய தெம்புடன், புத்தெழுச்சி பெற்றுப் புதிய முகங்களுடன் தேர்தல் களத்தில் குதித்துள்ளது.

நாட்டில் உள்ள மூத்த 19 கட்சிகள் ஒன்று இணைந்து இந்த 6 மாநிலத் தேர்தல் களத்தில் குதித்திருப்பது மா பெரும் பலத்துடன் டத்தோ ஸ்ரீ அன்வாரும், டத்தோ ஸ்ரீ ஜஹிட்டும் வெற்றி நடை போட தொடங்கி விட்டனர்.

இந்த 6 மாநிலத்தில் சிலாங்கூர், நெகிரி, பினாங்கு, கெடா ஆகிய மாநிலங்கள் மீண்டும் ஒற்றுமை அரசாங்கத்தின் தலைமைத்துவத்தில் அமையும் என்பது திண்ணம்.

அதே வேளையில் கிளாந்தான் மற்றும் திரங்கானு மாநிலங்களின் தேர்தலில் பலத்த போட்டியைக் கொடுக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆக மொத்தத்தில் நம்பிக்கை கூட்டணியும் தேசிய முன்னணியும் அசுர பலத்துடன் 6 மாநிலத் தேர்தலைச் சந்திக்க களத்தில் குதித்துள்ளன.

இந்த அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பாங்கி வட்டாரத்தை மட்டும் அல்லாது நாட்டை அதிர வைத்துள்ளது என்றால் அது மிகையாகாது.


Pengarang :