MEDIA STATEMENTNATIONAL

எதிர்கால சிலாங்கூர் அரசு மஇகா மற்றும் மசீசவை உள்ளடக்கியிருக்கும்- மந்திரி புசார் உத்தரவாதம்

ஷா ஆலம், ஜூலை  8- மாநிலத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வெற்றி பெற்றால் மாநிலத்தின் எதிர்கால நிர்வாகத்தில் மஇகா மற்றும் மசீச  ஆகிய கட்சிகள்  சேர்க்கப்படும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி உறுதியளித்துள்ளார்.

மாநிலத்தில் அரசியல் நிலைத்தன்மையை உறுதி செய்வதில் ஒற்றுமை அரசாங்கத்தைப் பிரதிநிதிக்கும் கட்சிகளின் பங்கேற்பு முக்கியமானது  சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பான் தலைவரான அவர் சொன்னார்.

அடுத்த மாதம் நடைபெற இருக்கும்  மாநில தேர்தல்களில்  ஒதுங்கியிருக்க மஇகாவும் மசீசவும் முடிவு செய்திருந்தாலும் அவ்விரு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் என்று தாம் நம்புவதாக அவர் சொன்னார்.

அவர்கள் பிரச்சாரத்தில் மாநிலத்தின் எதிர்கால நிர்வாகத்திலும் சேர்க்கப்பட வேண்டும். ஏனென்றால், 2020ஆம் ஆண்டில்  உருவான அரசியல் நிச்சயமற்ற நிலைக்கு தீர்வு என நாம் கருதும் ஒற்றுமை அரசாங்க கோட்பாட்டை  நாங்கள் தொடர்ந்து நிலை நிறுத்த விரும்புகிறோம் என்றார் அவர்.

நேற்று இங்கு நடைபெற்ற  சிலாங்கூர் பள்ளிகளுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைக் கூறினார்.

16வது பொதுத் தேர்தலுக்கான தயார் நிலையில் கவனம் செலுத்துவதற்காக ஆறு மாநில தேர்தல்களில் இருந்து விலகி இருக்க விரும்புவதாக மஇகாவும் மசீசவும் கடந்த புதன்கிழமை  அறிவித்தன.


Pengarang :